‘பாதம் காப்போம் திட்டம்’ சொன்னாரு..! செஞ்சாரு..!!

செஞ்சாரு: மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தை, முதல்வர் மு.க.ஸ்டாலின் 2021ம் ஆண்டு கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தொடங்கி வைத்தார். இந்த முன்னோடித் திட்டம், நோயாளிகளின் இல்லங்களுக்கே சென்று தொற்றா நோய்களுக்கான (நீரிழிவு, ரத்த அழுத்தம்) மருத்துவச் சேவைகளை வழங்குகிறது. இது மக்களிடயே நல்ல வரவேற்பை பெற்றது. இதனை விரிவாக்கம் செய்யும் விதமாக தமிழ்நாடு அரசு நீரிழிவு (சர்க்கரை) நோயாளிகளின் பாத பாதிப்புகளை முன்கூட்டியே கண்டறிந்து, கால் இழப்புகளைத் தடுக்கும் வகையில் பாதம் பாதுகாப்போம் திட்டத்தை தொடங்கியது.

குறிப்பாக, இந்தியாவில் பத்து கோடிக்கும் அதிகமான நோயாளிகள் நீரிழிவு நோயால் பாதிக்கப்படுகின்றனர். அதில் 25 சதவிகிதத்தினர் பாத பாதிப்புகளால் அவதியுறுவதும், இவர்களில் 85 சதவிகிதத்தினர் கால்களை இழக்க நேரிடுவதும் ஒரு தேசிய பேரிடர் ஆகும். தமிழகத்தில் 80 லட்சம் மக்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு உள்ளார்கள். பெருகி வரும் இப்பிரச்சினையின் தீவிர தன்மையை கண்டறிந்து இதைக் களைவதற்கான முன்னெடுப்பாக பாதம் பாதுகாப்போம் திட்டம் தமிழ்நாடு அரசால் தொடங்கப்பட்டது. இத்திட்டம் தஞ்சாவூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட முன்மாதிரி திட்டத்தினுடைய பலன்களின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டத்தில் 1.68 லட்சம் நீரிழிவு நோயாளிகளில் 1.65 லட்சம் நபர்களுக்கு பாத பாதிப்பு கண்டறிதல் மேற்கொள்ளப்பட்டது. அதனை தொடர்ந்து இந்த திட்டத்திற்கு ரூ.26.62 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு 2336 ஆரம்ப சுகாதார நிலையங்கள் (PHCs), 299 அரசு மருத்துவமனைகள், 36 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் ஆகியவற்றில் பாத பாதிப்பு கண்டறிதல் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் நீரிழிவு பாத மருத்துவத்தின் அனைத்து அம்சங்களையும் ஒருங்கிணைக்கிறது, குறிப்பாக பாத உணர்விழப்பு, ரத்த நாள அடைப்பு ஆகியவற்றை ஆரம்ப நிலையில் கண்டறிதல், பாத புண் தடுப்பு, புண் பராமரிப்பு, அறுவை சிகிச்சை இல்லாத சிகிச்சை, கால் புண் உள்ளிட்ட பாதிப்புக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

அதுமட்டுமின்றி பாத பாதுகாப்பு காலணிகள் வழங்கல், மறுவாழ்வு, அறுவை சிகிச்சைக்குப் பிறகு செயற்கை கால் பொருத்துதல் உள்ளிட்ட சேவைகளும் வழங்கப்பட்டு வருகிறது. தமிழக அரசின் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் பணியாளர்கள் மூலம் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வைத்து நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பரிசோதனை செய்யப்படும். அப்படி பரிசோதனை செய்யும்போது நீரிழிவு நோயாளிகளின் கால்களில் சீழ் வடிவது, புண்கள் இருந்து, அந்த புண்கள் கண்ணுக்கு தெரியும் அளவிற்கு இருந்தால் அதற்கு அப்போதே சிகிச்சை அளிக்கப்படும். ஆனால், புண் பெரியதாக இருந்து, ஒருவேளை அறுவை சிகிச்சை தேவைப்பட்டால் அரசு மருத்துவமனையிலோ அல்லது மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலோ இலவசமாக அறுவை சிகிச்சை செய்யப்படும். அதுமட்டுமல்லாமல், முதலமைச்சரின் காப்பீட்டு திட்டம் மூலம் இலவசமாக செயற்கை கால் பொருத்தப்படும். தஞ்சாவூர் மாவட்ட மாதிரி வெற்றியை தொடர்ந்து மாநில முழுமைக்கும் இத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டது. இத்திட்டம், தமிழ்நாட்டை நீரிழிவு பாத பராமரிப்பில் உலக முன்னோடியாக மாற்றியுள்ளது.

Related Stories: