மீண்டும் ஒரு கரூரா? ஷூட்டிங்க்கு தயாராகிறது பெரம்பூர் பனையூர்காரருக்கு குளுகுளு அறை: 3,200 சதுர அடியில் பிரமாண்ட ஆபீஸ்

நடிகர் விஜய்யின் தவெக எனும் கட்சியை ஆரம்பித்த நாள் முதல் தொடர்ந்து இதுதான் நடக்கப் போகிறது, இப்படி செயலாற்றுங்கள் என வெளிப்படையாக எந்த ஒரு அறிவிப்பும் வெளிவராமல் அவ்வப்போது தொண்டர்கள் குழப்பத்திலேயே இருந்து வருகின்றனர். மாவட்ட செயலாளர் நியமனம் தொடங்கி கீழ்மட்ட நிர்வாகிகள் நியமனம் வரை பல்வேறு குளறுபடிகள் நடந்தன. விஜய்யின் ரசிகர் மன்றத்தில் இருந்தவர்களுக்கு மட்டுமே கட்சியில் அதிக முக்கியத்துவம் தர வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இதனால் புதிதாக கட்சியில் சேர்ந்தவர்களுக்கும், ரசிகர் மன்றத்தில் இருந்தவர்களுக்கும் இடையே முட்டல், மோதல் ஏற்பட்டு வருகிறது. கீழ் மட்டத்திலிருந்து மேல் மட்டம் வரை புஸ்ஸி ஆனந்த் டீம். ஆதவ் அர்ஜுனா டீம். ஜான் ஆரோக்கியசாமி டீம் என பல கோஷ்டிகளாக தொண்டர்கள் செயல்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த மாதம் பெரம்பூர் சட்டமன்ற தொகுதியில் நடந்த செயல் வீரர்கள் கூட்டத்தில் பேசிய ஆதவ் அர்ஜுனா, ‘நடிகர் விஜய் பெரம்பூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட நான் முன்மொழிகிறேன்’ என்றார். உடனே, கூட்டத்தில் இருந்த பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அதை தான் வழிமொழிவதாகவும், தலைவரிடம் கொண்டு செல்வதாகவும் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து விஜய் பெரம்பூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடப் போகிறார் என பரபரப்பாக பேசப்பட்டது. ஆனால், எப்போதும் போல எந்த பிரச்னைக்கும் வெளிப்படையாக வாய் திறக்காத விஜய் இதிலும் மவுனம் காத்து வருகிறார்.

இந்நிலையில், கடந்த சில நாட்களாக பெரம்பூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கொடுங்கையூர் கிருஷ்ணமூர்த்தி நகர் ஜவகர் தெருவில் 3200 சதுர அடியில் தவெக பெரம்பூர் சட்டமன்ற அலுவலகம் அமைக்கும் பணிகள் நடந்தது. முழுவதும் சென்ட்ரலைஸ்ட் ஏசி வசதியுடன் இந்த தேர்தல் அலுவலகம் தயார் செய்யப்பட்டு வருகிறது. கார் பார்க்கிங் வசதியுடன் உள்ள இந்த அலுவலகத்தை அவரது ரசிகர்கள் சிலர் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து விஜய் இந்த அலுவலகத்திற்கு வரப்போகிறார். விஜய் பெரம்பூர் தொகுதியில் போட்டியிடப் போகிறார் என சமூக வலைதளங்களில் வீடியோ பதிவிட்டு வருகின்றனர். இதுகுறித்து தவெக நிர்வாகிகளிடம் கேட்டபோது, ‘‘மேல தயார் செய்ய சொன்னார்கள், தயார் செய்து வருகிறோம். தலைவர் போட்டியிடப் போகிறார் என கூறுகிறார்கள். ஆனால், அதுகுறித்து இன்னும் முழுமையாக எங்களுக்கே தெரியவில்லை’’ என்றனர்.

இதுவரை விஜய் பிரசாரத்துக்கு சென்ற இடமெல்லாம், பட சூட்டிங் செல்வதுபோல் கேரவனில் சொகுசாக சென்றார். ஆனால், அவருக்கு பல மணி நேரம் காத்திருந்த ரசிகர்கள், தொண்டர்கள் செத்து மடிந்தனர். தற்போது, தேர்தல் நெருங்கி கொண்டிருக்கும் நிலையில், அவர் நிற்க திட்டமிட்டுள்ள பெரம்பூரிலும் சினிமா சூட்டிங்க்கு செட் போடுவதுபோல் ஏசி அறையை பிரசாரத்துக்கு தயார் செய்து வருகிறார். எப்போதும் போலே பனையூர் வீட்டில் எல்லா தலைவர்களும் மரியாதை செலுத்தி, வீடியோ மற்றும் புகைப்படங்களை வெளியிடும் விஜய், பெரம்பூர் தொகுதியில் வீதி வீதியாக செல்லாமல் ஏசி ரூமில் உட்காந்து சூட்டிங் நடத்தி வீடியோ மற்றும் புகைப்படங்களை எடுத்து வெளியிட போகிறார் என நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர்.

ஏற்கனவே கரூர் பிரசாரத்தில் விஜய்யின் ஜனநாயகன் படத்துக்கு சூட்டிங் எடுக்கப்பட்டதாக குற்றச்சாட்டு உள்ளது. அங்கு ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் பலியாகினர். இதுதொடர்பாக விசாரித்து வரும் சிபிஐயிடம், கரூரில் சூட்டிங் நடத்தப்பட்டதற்கான ஆதாரங்கள் சிக்கி உள்ளதாக கூறப்படுகிறது. விஜய் பிரசாரத்தில், திரைப்படத்துக்கு பயன்படுத்தப்படும் உயர்ரக கேமராக்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக வீடியோ, புகைப்படங்கள் சிக்கி உள்ளது. இதனால், பெரம்பூரில் அலுவலகத்துக்கு விஜய் வரும்போது மீண்டும் கரூர் போன்று ஒரு சூட்டிங் சம்பவம் நடந்தால் விபரீதம் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவித்து உள்ளனர்.

* தவெக போடும் தப்புக்கணக்கு
பெரம்பூர் சட்டமன்றத் தொகுதியில் 40,000க்கும் மேற்பட்ட தொண்டர்கள் தவெகவில் சேர்ந்துள்ளதாக முதலில் கணக்கு காட்டப்பட்டது. ஆனால், அதன் பிறகு பலரும் இறங்கி களத்தில் விசாரித்தபோது நலத் திட்டம் பெற வந்தவர்களை உறுப்பினர்களாக சேர்ந்தால்தான் நலத்திட்டங்கள் கிடைக்கும் என பொதுமக்களை சேர்த்தது தெரியவந்தது. மேலும், பெரம்பூர் சட்டமன்ற தொகுதியில் தவெக சார்பில் எடுக்கப்பட்டுள்ள சிறுபான்மையினர் ஓட்டு கணக்கிலும் வித்தியாசம் உள்ளதாகவும், பெரம்பூர் சட்டமன்றத் தொகுதியில் திமுக, அதிமுகவுக்கு தனியாக ஓட்டு வாங்கி உள்ளதாகவும், இவற்றையெல்லாம் முழுமையாக தெரிந்து கொள்ளாமல் தவெக தப்பு கணக்கு போடுவதாகவும் விஷயம் அறிந்தவர்கள் கூறுகின்றனர். எது எப்படியோ நடிகர் விஜய் பெரம்பூரில் மட்டுமல்ல, சென்னையில் எந்த தொகுதியில் நின்றாலும் அது அவருக்கு சவாலாகத்தான் இருக்கும் என கூறப்படுகிறது.

* 234 தொகுதிகளிலும் வேட்பாளர் கிடைக்கல: மனஉளைச்சலில் விஜய்
தவெகவில் விருப்ப மனு அளித்தவர்களிடம் கடந்த 10ம்தேதி விஜய் நேர்காணல் நடத்தினார். தற்போது வேட்பாளர் தேர்வில் அவர் தீவிரம் காட்டி வருகிறார். ஆனால், மக்களுக்கு பரிச்சயமான, தகுதியான வேட்பாளர்கள் கிடைக்காமல் விஜய் திண்டாடி வருவதாக கூறப்படுகிறது. வேட்பாளர்களை பொறுத்தவரை மக்களுக்கு பரிச்சயமான முகமாக இருக்க வேண்டும். அப்படி பார்த்தால் தவெகவில் இப்போது செங்கோட்டையன், புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா என விரல் விட்டு எண்ண கூடிய ஒற்றை இலக்கு நபர்களே மக்களுக்கு தெரிந்த முகங்களாக உள்ளனர். மற்றவர்கள் விஜய் ரசிகர் மன்றத்தை சேர்ந்தவர்கள் தான். எப்படியும் கடைசி நேரத்தில் காங்கிரஸ் கூட்டணிக்கு வந்து விடும். அவர்களிடம் 60 தொகுதியை தள்ளி விட்டு விடலாம். மற்ற தொகுதிகளில் மக்களிடம் அறிமுகமானவர்கள், டாக்டர்கள், வழக்கறிஞர்கள், கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள் ஆகியோரை தேர்தலில் நிறுத்தலாம் என விஜய் முடிவு செய்திருந்தாராம். ஆனால் காங்கிரசும் கூட்டணிக்கு வரவில்லை. எதிர்பார்த்த வேட்பாளர்களும் கிடைக்கவில்லை. இதனால் விஜய் மன உளைச்சலில் இருக்கிறாராம்’’என்றனர்.

* ஆரோக்கியசாமியும்… மாம் சாமி விஜய்யும்…
விஜய் தவெகவை துவக்கியதற்கு முக்கிய பங்காற்றியவர் தேர்தல் வியூக வகுப்பாளர் ஜான் ஆரோக்கியசாமி. அவர் என்ன சொல்கிறாரோ, அதை தான் விஜய் கேட்டு வந்தார். ஆமாம் சாமியாகவும் இருந்து வந்தார். ஆனால், அவரது ஆலோசனை கட்சிக்கு பெரிதாக பலனளிக்கவில்லை. எதிர்பார்த்த அளவில் கூட்டணியும் அமையவில்லை… வேட்பாளர்களும் கிடைக்கவில்லை….கரூர் பிரசாரமும் சொதப்பலாகி உயிர்ப்பலியானதால் ஜான் ஆரோக்கியசாமி மீது விஜய் கடும் அதிருப்தியில் இருந்து வருகிறாராம். வேட்பாளர் தேர்வில் கூட ஜான் ஆரோக்கியசாமியின் ஆலோசனையை புறந்தள்ளி விட்டு, விஜய்யே நேரடியாக களத்தில் இறங்கி வேட்பாளர் தேர்வில் ஈடுபட்டுள்ளாராம்.

Related Stories: