கோட்டையைப் பிடிப்பதில் திருப்பூர் மக்களின் பங்கு நிச்சயம் பெரிய அளவில் இருக்கும்: செய்திதுறைஅமைச்சர் மு.பெ.சாமிநாதன்

1. தமிழ்நாட்டில், செய்தித் துறையில் உள்ளவர்களுக்கு எதிரான அடக்குமுறைகள் அடங்கி, ஆரோக்கியம் தழைத்துள்ளதா?
2021ம் ஆண்டு திமுக தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமைந்த பிறகு, பத்திரிகையாளர்களுக்கு முழு சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது. ஜனநாயகத்தின் நான்கு தூண்களில் ஒன்றான பத்திரிகைத் துறை மிகுந்த சுதந்திரத்தோடு, மகிழ்ச்சியோடு நடுநிலையோடு பணியாற்றி வருகிறார்கள். அரசுக்கு எதிரான விமர்சனங்கள் வந்தாலும், அது சரியான விமர்சனமாக இருந்தால் திருத்திக்கொள்ளப்படுகிறதே தவிர, அவர்களுக்கு எந்த இடையூறும் தரக்கூடாது என்பதில் முதலமைச்சர் உறுதியாக இருக்கிறார். மேலும், தேர்தல் வாக்குறுதியில் சொன்னபடி பத்திரிகையாளர் நல வாரியம் அமைக்கப்பட்டு, ஓய்வூதியம் மற்றும் பணிக்காலத்தில் உயிரிழக்கும் பத்திரிகையாளர் குடும்பங்களுக்கு நிவாரண நிதி போன்றவை உடனுக்குடன் வழங்கப்பட்டு வருகின்றன. செய்தித்துறை மிகவும் ஆரோக்கியமாகவே செயல்பட்டு வருகிறது.

2. உங்கள் தமிழ் வளர்ச்சித் துறையின் கீழ் தமிழ் மொழிக்கு செய்யப்பட்டிருக்கும் மிகப்பெரிய சாதனையாக எதை கருதுகிறீர்கள்?
தமிழுக்காகத் தியாகம் செய்தவர்களுக்குச் சிலைகள் மற்றும் அரங்குகள் அமைப்பதோடு, எழுத்தாளர்கள் மற்றும் படைப்பாளிகளுக்கு உரிய விருதுகள் வழங்கப்படுகின்றன. தமிழ் வளர்ச்சித் துறை வரலாற்றிலேயே இல்லாத வகையில், தமிழ் இலக்கியம் படித்த இளைஞர்களுக்கு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) மூலம் உதவி இயக்குனர் பணியிடங்கள் வழங்கப்பட்டுள்ளன. அவர்கள் மாவட்ட அளவில் தமிழ் வளர்ச்சிக்கான அதிகாரிகளாகச் செயல்படுவார்கள். இது வரலாற்றில் முதல் முறையாகும்.

3. பிரதமர் மோடியும் தமிழ் மீது உள்ள பற்றை அடிக்கடி வெளிப்படுத்துவதால், ஏதேனும் நன்மைகள் கிடைத்துள்ளதா?
அவர் தமிழ்நாட்டிற்கு வரும்போது மட்டும் இதைப் பேசுகிறார், குறிப்பாகத் தேர்தல் நேரத்தில். மக்கள் இதை ஒரு நாடகமாகவே கருதுகிறார்கள். கடந்த 10 ஆண்டுகளில் சமஸ்கிருத மொழிக்கு சுமார் ரூ.2400 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது, ஆனால் தமிழ் வளர்ச்சிக்கு வெறும் ரூ.167 கோடி (200 கோடிக்கும் குறைவு) மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. பிற மொழிகளைத் திணிக்கும் முயற்சியே நடக்கிறதே தவிர, தமிழுக்காகச் சொல்லிக்கொள்ளும் அளவு நிதி ஒதுக்கீடு இல்லை.

4. திருப்பூர் மாவட்ட அமைச்சரான நீங்கள், கொங்கு மண்டலத்தில் திமுக கொடி உயரப் பறந்து கோட்டையை பிடிக்க உதவுமா? அல்லது கோட்டை விடவும் வாய்ப்பு உள்ளதா என்பதையும் சொல்ல முடியுமா?
பதில்: முதலமைச்சரின் கடந்த ஐந்தாண்டு காலத் திட்டங்கள் மக்கள் மத்தியில் நன்றாகச் சென்றடைந்துள்ளது. திருப்பூர் மாவட்டம் ஏழை, எளிய மக்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்குவதில் தமிழகத்திலேயே முதலிடத்தில் உள்ளது. அதேபோல், பட்டாக்களைக் கணினியில் பதிவேற்றம் செய்வதில் மூன்றாவது இடத்தில் உள்ளது. குடிநீர் மற்றும் விவசாயத் திட்டங்கள் சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டுள்ளன. கோட்டையைப் பிடிப்பதில் திருப்பூர் மாவட்ட மக்களின் பங்கு நிச்சயமாகப் பெரிய அளவில் இருக்கும்.

Related Stories: