நடிகை, பெண்களை இழிவுபடுத்தி பேசிய அதிமுக மாஜி அமைச்சர்கள் படத்திற்கு செருப்பு மாலை: பாவாடை போட்டு விட்டும் பதிலடி

தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 23ம் தேதி நடைபெற உள்ளது. இதையடுத்து திமுக, அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் இப்போதே பிரசாரத்தை துவக்கியுள்ளனர். இதில், அதிமுக மாஜி அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள் பிரசாரம் மேற்கொள்ளும்போது ஏதேனும் சர்ச்சையில் சிக்குவது வழக்கமாகிவிட்டது. கடந்த சில நாட்களுக்கு முன்பு அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், முதல்வரின் கனவை சொல்லுங்க திட்டத்தை விமர்சித்து, தனக்கு நடிகை நயன்தாராதான் வேண்டும் என்று தனது கனவை சொன்னார்.

இதற்கு நடிகர் சங்கத்தினர், மகளிர் அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்தனர். இதேபோல முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், ‘பெண்களுக்கு சேலை கொடுக்கிறார்கள், அவர்கள் பாவாடை கேட்கிறார்கள்’ என்று ஆபாசமாக பேசினார். இதற்கும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. மற்றொரு முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், ஒல்லினா முருங்கை…குண்டுனா பூசணிக்காய் என்று பெண்கள் உருவத்தை வைத்து வர்ணித்து பொதுமேடையில் பேசினார்.

நடிகை மற்றும் பெண்கள் பற்றி அதிமுக மாஜி அமைச்சர்களின் பேச்சை, நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். திமுக மகளிர் அணி சார்பில் தமிழகம் முழுவதும் அவர்களது உருவபொம்மைகளை எரித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், கோவை மாவட்டம் பொள்ளாச்சி மத்திய பஸ் நிலையம் அருகே உள்ள ரவுண்டானா பகுதியில் மின் கம்பங்களில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகம், திண்டுக்கல் சீனிவாசன், விஜயபாஸ்கர் ஆகியோரின் முழு உருவப்படத்தை கட்டி தொங்கவிட்டதுடன், கழுத்தில் செருப்பு மாலை அணிவிக்கப்பட்டு இருந்தது.

பாவாடை கேட்ட திண்டுக்கல் சீனிவாசன் படத்திற்கு பாவாடை அணிவிக்கப்பட்டிருந்தது. அந்த படத்தில் ஒரு போர்டு வைக்கப்பட்டிருந்தது. அதில், ‘பெண்களுக்கு எதிராக அதிமுக! பெண்களை பழித்தும், இழித்தும் பேசிவரும் அதிமுகவினரை கண்டிக்கிறோம். இப்படிக்கு… பொள்ளாச்சி அனைத்து மகளிர்’ என எழுதப்பட்டிருந்தது. பொள்ளாச்சி நகரில் மக்கள் நடமாட்டம் மற்றும் வாகன போக்குவரத்து அதிகம் உள்ள பகுதியில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் உருவப்படத்திற்கு செருப்பு மாலை அணிவித்து தொங்கவிட்டிருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுபற்றி தகவல் அறிந்ததும் உள்ளூர் அதிமுகவினர் சிலர், அங்கு விரைந்தனர். செருப்பு மாலை அணிவிக்கப்பட்ட அதிமுக முன்னாள் அமைச்சர்களின் புகைப்படங்களை அவசரம் அவசரமாக அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இதுகுறித்து பொள்ளாச்சி சப்-கலெக்டர் ராமகிருஷ்ணசாமியிடம் பொள்ளாச்சி தொகுதி எம்எல்ஏ பொள்ளாச்சி ஜெயராமன் புகார் அளித்துள்ளார். அதில், சம்பந்தப்பட்ட நபர்கள் மீது வழக்கு பதிந்து, நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

* லாட்டரிக்கு குடும்பத்தோட ஆதரவு: கட்சி தாவும் பாஜ அமைச்சர்? புதுச்சேரியில் டிவிஸ்ட்
புதுச்சேரி தேஜ கூட்டணியில் லாட்டரி அதிபர் மார்ட்டின் மகன் ஜோஸ் சார்லஸ் மார்ட்டினின் லட்சிய ஜனநாயக கட்சியை சேர்க்க கூடாது, அப்படி சேர்த்தால் என்.ஆர். காங் விலகும் என்று முதல்வர் ரங்கசாமி பிடிவாதமாக கூறிவிட்டார். இந்நிலையில் நேற்று முன்தினம் அமாவாசை என்பதால், பாஜவை சேர்ந்த அமைச்சர் ஜான்குமாரின் மனைவி ஜஸ்டின், லஜக சார்பில் நெல்லித்தோப்பு தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தார். அதேபோல் ஜான்குமாரின் மூத்த மகனும், நெல்லித்தோப்பு தொகுதியின் தற்போதைய எம்எல்ஏவுமான ரிச்சர்ட் பாகூர் தொகுதியில் லஜக சார்பில் போட்டியிட மனு தாக்கல் செய்தார். இவருக்கு மாற்று வேட்பாளராக மற்றொரு மகன் ரீகன் மனு தாக்கல் செய்து
உள்ளார்.

தேஜ கூட்டணியில் லஜகவால் பிரச்னை ஏற்பட்டுள்ள சூழலில், பாஜ அமைச்சரின் மனைவி மற்றும் இரு மகன்கள் வேட்புமனு தாக்கல் செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது பாஜ சிட்டிங் எம்எல்ஏ ரிச்சர்ட் லஜகவில் வேட்புமனு அளித்துவிட்ட நிலையில், அவரது தந்தையும் அமைச்சருமான ஜான்குமாரும் பாஜவில் சீட் கிடைக்காதபட்சத்தில் அக்கட்சியில் இருந்து விலகி லஜகவில் முதலியார்பேட்டை தொகுதியில் போட்டியிட முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் புதுவை அரசியலில் பல அதிரடி திருப்பங்கள் ஏற்படும் என அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

Related Stories: