தாம்பரம்-மதுரவாயல் புறவழிச்சாலையில் ஆம்னி பேருந்து கவிழ்ந்து 20 பயணிகள் காயம்: முன்பக்க டயர் வெடித்து விபரீதம்

மதுரவாயல்: தாம்பரம்-மதுரவாயல் புறவழிச்சாலையில் முன்பக்க டயர் வெடித்து, ஆம்னி பேருந்து கவிழ்ந்ததால் வெளிநாட்டு பயணிகள் உள்பட 20 பேர் காயம் அடைந்தனர். கேரளாவில் இருந்து 20 பயணிகளை ஏற்றிக்கொண்டு நேற்று முன்தினம் மாலை ஆம்னி பேருந்து ஒன்று சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம் நோக்கி சென்று கொண்டிருந்தது. பேருந்தை கேரளாவை சேர்ந்த சுரேஷ் என்பவர் ஓட்டிச் சென்றார்.

நேற்று காலை தாம்பரம்-மதுரவாயல் புறவழிச்சாலையில் திருநீர்மலை அருகே பேருந்து சென்று கொண்டிருந்த போது, எதிர்பாராதவிதமாக பேருந்தின் முன்பக்க டயர் திடீரென பலத்த சத்தத்துடன் வெடித்தது. இதனால், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, சாலையில் தாறுமாறாக ஓடி, நடுவே இருந்த தடுப்பையும் தாண்டி, எதிர் திசையில் சென்று கவிழ்ந்தது. இதில், பேருந்தில் இருந்த வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் உள்பட அனைவரும் வலியால் அலறி துடித்தனர்.

இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவ்வழியாக சென்ற சக வாகன ஓட்டிகள், உடனடியாக களத்தில் இறங்கி மீட்புப் பணியில் ஈடுபட்டனர். மேலும், ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு காயம் அடைந்தவர்கள் சிகிச்சைக்காக தாம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதுகுறித்து குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் விபத்து நடந்த இடத்தை பார்வையிட்டனர். மேலும், வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த சில தினங்களாக தாம்பரம்- மதுரவாயல் புறவழிச்சாலையில் அனகாபுத்தூர் மற்றும் திருநீர்மலை ஆகிய பகுதிகளுக்கு இடைப்பட்ட சாலையில் அடிக்கடி இதுபோன்று வாகனங்களின் டயர் வெடித்து விபத்துக்குள்ளாவது தொடர் கதையாக நடந்து வருகிறது. மோசமான சாலை பராமரிப்பே இதுபோன்ற விபத்திற்கு காரணம் என்று வாகன ஓட்டிகள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் கூறினர்.

Related Stories: