பிற நாடுகளுடன் மேற்கொள்ளப்படும் வர்த்தக ஒப்பந்தங்களால் புதிய வேலைவாய்ப்புகள்: ரோஜ்கர் மேளாவில் பிரதமர் மோடி பேச்சு

புதுடெல்லி: உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் உள்ள இளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில், இந்தியா பல்வேறு நாடுகளுடன் வர்த்தகம் மற்றும் தொழிலாளர் இடம்பெயர்வு ஒப்பந்தங்களை மேற்கொண்டு வருவதாக பிரதமர் மோடி கூறி உள்ளார். நாடு முழுவதும் ஒன்றிய அரசு பணிகளுக்கு தேர்வு செய்யப்பட்ட 61 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணை வழங்குவதற்கான 18வது ரோஜ்கர் மேளா 45 இடங்களில் நேற்று நடந்தது.

இதில் வீடியோ கான்பரன்ஸ் மூலம் பணி நியமன ஆணைகளை பிரதமர் மோடி வழங்கி பேசியதாவது: இந்தியா பல்வேறு நாடுகளுடன் வர்த்தகம், தொழிலாளர் இடம் பெயர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு வருகிறது. இந்த ஒப்பந்தங்கள் நாட்டின் இளைஞர்களுக்கு புதிய வாய்ப்புகளை கொண்டு வருகின்றன. இன்று வழங்கப்படும் இந்த நியமனக் கடிதங்களை, தேசத்தை கட்டியெழுப்புவதில் பங்கேற்பதற்கான அழைப்பாகவும், வளர்ந்த இந்தியாவை உருவாக்குவதற்காக உழைப்பதற்கான உறுதிமொழியாகவும் கருத வேண்டும்.

கடந்த காலங்களில் அரசு அலுவலகங்களில் நீங்கள் எதிர்கொண்ட அனுபவங்களை நினைத்து பாருங்கள். இனி நீங்கள் அரசு ஊழியரான பிறகு, அதுபோன்ற சிரமங்கள் மக்களை பாதிக்க அனுமதிக்க மாட்டோம் என உறுதிமொழி எடுத்துக் கொள்ளுங்கள். அரசுப் பணியில் சேரும் இளைஞர்கள், ‘குடிமக்கள் கடவுளுக்கு சமமானவர்கள்’ என்ற தாரக மந்திரத்துடன் பணியாற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். இதுவரை ரோஜ்கர் மேளா மூலம் 11 லட்சம் பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: