‘தொழில்’ என்ற வார்த்தைக்கான விளக்கம் மாற்றப்படுமா? 9 நீதிபதிகள் அமர்வு 17ஆம் தேதி விசாரணை

புதுடெல்லி: இந்திய தொழிலாளர் சட்டத்தின் அடிப்படை கட்டமைப்பை மாற்றியமைக்கும் முக்கிய சட்டப் போராட்டம் உச்ச நீதிமன்றத்தில் தொடங்குகிறது. கடந்த 1978ம் ஆண்டு பெங்களூரு குடிநீர் வாரிய வழக்கில் நீதிபதி வி.ஆர்.கிருஷ்ணய்யர் தலைமையிலான அமர்வு வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியது. அந்தத் தீர்ப்பில் ‘தொழில்’ (Industry) என்பதற்கான ‘மும்முனை சோதனை’ விதியை நீதிமன்றம் வகுத்தது. அதன்படி, ஒரு நிறுவனம் தொடர்ச்சியான செயல்பாட்டைக் கொண்டிருப்பது, முதலாளி மற்றும் தொழிலாளி இடையிலான ஒத்துழைப்பு, லாப நோக்கம் இல்லாவிட்டாலும் மனித தேவைகளுக்கான பொருட்கள் அல்லது சேவைகளை உற்பத்தி செய்து விநியோகிப்பது ஆகிய மூன்று அம்சங்கள் இருந்தால் அவை தொழில் நிறுவனமாக கருதப்படும். இந்த விதியால் பல்கலைக்கழகங்கள், மருத்துவமனைகள் மற்றும் அறக்கட்டளைகள் உள்ளிட்டவை தொழில் நிறுவனங்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டு, அங்கு பணியாற்றும் ஊழியர்களுக்குத் தொழிலாளர் சட்டப் பாதுகாப்பு கிடைத்தது.

தற்போதுள்ள சூழலில், இந்த பழைய வரையறையை மறுபரிசீலனை செய்ய வேண்டியதன் அவசியம் குறித்து விரிவான விவாதங்கள் எழுந்துள்ளன. குறிப்பாக, 2005ம் ஆண்டு நடந்த உத்தரப்பிரதேச அரசு மற்றும் ஜெய் பிர் சிங் இடையிலான வழக்கில் இந்த கோரிக்கை வலுப்பெற்றது. அரசு மேற்கொள்ளும் இறையாண்மை சார்ந்த பணிகள் மற்றும் அறப்பணிகளை வணிக ரீதியிலான தொழிலாகக் கருத முடியாது என்று ஒரு தரப்பினர் வாதிடுகின்றனர். மேலும், 1970ம் ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவின் பொருளாதாரச் சூழல் முற்றிலும் மாறிவிட்டதால், தற்போதைய நிலையில் இத்தகைய விரிவான வரையறை அத்தியாவசிய சேவைகளுக்கும் அறக்கட்டளைகளுக்கும் கூடுதல் சுமையை ஏற்படுத்துவதாகக் கருதப்படுகிறது. இதனடிப்படையில், வரும் 17ம் தேதி முதல் உச்ச நீதிமன்றஅரசியல் சாசன அமர்வு இந்த வழக்கை விரிவாக விசாரிக்க உள்ளது.

Related Stories: