லடாக்கிற்கு மாநில அந்தஸ்து கோரி போராடி கைதான சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் மீதான தேசிய பாதுகாப்பு சட்ட காவல் ரத்து: ஒன்றிய அரசு உத்தரவு; ராஜஸ்தான் சிறையில் இருந்து உடனடியாக விடுதலை

புதுடெல்லி: லடாக் யூனியன் பிரதேசத்துக்கு தனி மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் மற்றும் அரசியலமைப்பின் ஆறாவது அட்டவணையின்கீழ் அதை சேர்க்க வேண்டும், ஆகிய கோரிக்கைகளை லே உச்ச அமைப்பு(எல்ஏபி) வலியுறுத்தி வருகிறது. இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி காலநிலை ஆர்வலர் சோனம் வாங்சுக் மற்றும் லே உச்ச அமைப்பை சேர்ந்தவர்கள் கடந்த ஆண்டு செப்டம்பர் 10ம் தேதி முதல் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்துக்கு ஆதரவாக லடாக் தலைநகர் லே-வில் நடந்த போராட்டங்களில் வன்முறை வெடித்தது.

அப்போது போராட்டக்காரர்கள் மீது காவல்துறையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 4 இளைஞர்கள் பலியாகினர். மேலும், 22 காவலர்கள் உள்பட 90 பேர் காயமடைந்தனர். இந்த வன்முறை சம்பவம் குறித்து 50க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த விவகாரத்தில் காலநிலை ஆர்வலர் சோனம் வாங்சுக் கடந்த ஆண்டு செப்டம்பர் 26ம் தேதி தேசிய பாதுகாப்பு சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு, ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில், சோனம் வாங்சுக்கை தேசிய பாதுகாப்பு சட்டத்தின்கீழ் சிறையில் அடைத்த உத்தரவை உடனடியாக ரத்து செய்வதாக ஒன்றிய அரசு நேற்று அறிவித்தது. இதுதொடர்பாக ஒன்றிய உள்துறை அமைச்சகம் நேற்று வௌியிட்ட அறிக்கையில், “தேசிய பாதுகாப்பு சட்டத்தின்கீழ் வழங்கப்பட்ட தண்டனை காலத்தில் பாதியை சோனம் வாங்சுக் கடந்து விட்டதால், தற்போது அவரை விடுவிக்க அரசு முடிவு செய்துள்ளது. லடாக்கில் அமைதி, ஸ்திரத்தன்மை ஆகியவற்றை மீண்டும் கொண்டு வரவும், பரஸ்பர நம்பிக்கையை வளர்க்கவும் இந்த தடுப்பு காவல் ரத்து செய்யப்படுகிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து சிறையில் இருந்து உடனடியாக சோனம் வாங்சுக் விடுதலை செய்யப்பட்டார்.

Related Stories: