கொல்கத்தாவில் பிரதமர் மோடி பேச்சு மம்தா பானர்ஜி ஆட்சிக்கு கவுண்டவுன் தொடங்கியது

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜியின் ஆட்சிக்கு கவுண்டவுன் தொடங்கி விட்டதாக பிரதமர் மோடி கூறி உள்ளார். விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடக்க உள்ள மேற்கு வங்க மாநிலத்திற்கு நேற்று சென்ற பிரதமர் மோடி கொல்கத்தாவில் பிரிகேட் பரேட் மைதானத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசியதாவது: மேற்கு வங்கத்தில் ஊடுருவல் என்பது முக்கிய பாதுகாப்பு மற்றும் அரசியல் பிரச்னையாக உருவெடுத்துள்ளது. தேர்தல் ஆதாயங்களுக்காக திரிணாமுல் காங்கிரஸ் அரசு ஊடுருவலை ஊக்குவித்தது. இதனால் பல பகுதிகளில் மக்கள் தொகை அமைப்பு மாறிவிட்டது.

இந்துக்களை சிறுபான்மையினராக மாற்றும் முயற்சியில் திரிணாமுல் காங்கிரஸ் திட்டமிட்டு ஈடுபட்டு வருகிறது. ஊடுருவியர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படாமல் இருப்பதற்காகவும், வாக்காளர் பட்டியல் தூய்மைப்படுத்தப்படாமல் இருப்பதற்காகவும் இவர்கள் எஸ்ஐஆர் நடவடிக்கையை எதிர்க்கிறார்கள். அண்டை நாடுகளில் மதரீதியாக துன்புறுத்தல்களில் இருந்து தப்பி வந்த இந்து அகதிகளுக்கு குடியுரிமை வழங்குவதை திரிணாமுல் காங்கிரஸ் எதிர்க்கிறது. ஏனென்றால் அவர்களை தங்களின் வாக்கு வங்கி இல்லை என்பதால்தான். திரிணாமுல் காங்கிரஸ் அரசு குண்டர்கள் மற்றும் குற்றவாளிகளின் ஆதரவில் இயங்குகிறது. இந்த மண்ணின் மகள்களை சீரழித்த பலாத்கார குற்றவாளிகளை வெளிப்படையாக பாதுகாக்கிறது.

ஜனாதிபதி முர்முவை அவமதித்ததன் மூலம் ஒட்டுமொத்த பழங்குடியினரையும் அரசியலமைப்பையும் அவமித்துள்ளனர். எஸ்ஐஆர் விவகாரத்தில் தேர்தல் ஆணையம் போன்ற அரசியலமைப்பு நிறுவனங்களையும் தாக்குவதில் மும்முரமாக உள்ளனர். திரிணாமுல் காங்கிரசுக்கு நினைவூட்ட விரும்புகிறேன். அதன் குண்டர்களின் நாட்கள் முடிவடைகின்றன. இந்த ஆட்சியின் முடிவுக்கான கவுண்டவுன் தொடங்கி விட்டது. அனைவருக்குமான அனைவரையும் உள்ளடக்கிய கொள்கையின் அடிப்படையில் மாநிலத்தில் பாஜ ஆட்சி அமையும். இவ்வாறு பிரமதர் மோடி கூறினார்.

* காங். மீது தாக்கு
அசாமின் சில்சாரில் ரூ.23,550 கோடி மதிப்பிலான வளர்ச்சித்திட்டப் பணிகளை பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்து பேசுகையில், ‘‘போர்கள் காரணமாக உலகளாவிய மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் போர்களால் மக்கள் மீது ஏற்படும் தாக்கத்தை குறைக்க ஒன்றிய அரசு பாடுபடுகிறது. ஆனால் காங்கிரஸ் மக்கள் மத்தியில் பீதியை கிளப்பி வருகிறது. பொய்யான ரீல்ஸ்கள், புரளிகள், புரட்டுகள் மூலம் மக்களை தவறாக வழிநடத்தி வருகிறது’’ என்றார்.

Related Stories: