ஈரான் அனுமதியுடன் ஹார்முஸ் ஜலசந்தியை கடந்தன 2 எல்பிஜி டேங்கர் கப்பல் இந்தியா வருகை: ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவிப்பு

புதுடெல்லி: ஈரானின் அனுமதியைத் தொடர்ந்து, மேலும் 2 எல்பிஜி டேங்கர் கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து இந்தியா நோக்கி பயணித்து வருவதாக ஒன்றிய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது போர் தொடுத்துள்ள நிலையில், வளைகுடா நாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் ஏற்றிச் செல்லும் கப்பல்களின் முக்கிய வழித்தடமான ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடி இருக்கிறது. இதனால், கடந்த 10 நாட்களாக ஹார்முஸ் ஜலசந்தியில் நூற்றுக்கணக்கான கப்பல்கள் தேங்கி நிற்கின்றன. ஈரானுக்கும் ஓமனுக்கும் இடையேயான இந்த ஜலசந்தி வழியாகத்தான் உலகின் 20 சதவீத கச்சா எண்ணெய் ஏற்றுமதி நடைபெறுகிறது.

இதில், வளைகுடா நாடுகளில் இருந்து எல்பிஜி காஸ் கொண்டு வர வேண்டிய கப்பல்களும் ஹார்முஸ் ஜலசந்தியில் சிக்கியதால் இந்தியாவில் கடுமையான சமையல் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஒன்றிய வெளியுறவு அமைச்சகம் ஈரான் அரசுடன் நடத்திய தொடர் பேச்சுவார்த்தையை தொடர்ந்து இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து செல்ல சிறப்பு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. அதன்படி, இந்திய கொடியிடப்பட்ட ஒவ்வொரு கப்பல்களாக தற்போது ஆபத்தான ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து வெளியில் வந்து கொண்டிருக்கின்றன. 2 கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதி தரப்பட்டிருப்பதாக நேற்று முன்தினம் தகவல்கள் வெளியான நிலையில், அந்த 2 கப்பல்களும் தற்போது ஹார்முசை கடந்து இந்தியாவை நோக்கி பயணத்தை தொடங்கி இருக்கின்றன.

இது குறித்து ஒன்றிய கப்பல் போக்குவரத்து அமைச்சகத்தின் சிறப்பு செயலாளர் ராஜேஷ்குமார் சின்ஹா மற்றும் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது:
இந்தியாவின் எல்பிஜி தேவையில் 60 சதவீதம் இறக்குமதி மூலம் பூர்த்தி செய்யப்படுகிறது. இதில் 85-90 சதவீதம் சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் போன்ற வளைகுடா நாடுகளில் இருந்து பெறப்படுகிறது. அவை ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து அனுப்பப்படுகின்றன. எண்ணெய் மற்றும் எரிவாயு கப்பல்களின் முக்கிய வழித்தடமான இப்பாதை இம்மாதத்தின் முதல் வாரத்தில் இருந்து மூடப்பட்டுள்ளது.

மேற்கு ஆசியாவில் போர் ஏற்பட்டதில் இருந்து, ஹார்முஸ் ஜலசந்தியின் மேற்கு பகுதியில் 24 இந்திய கப்பல்களும், கிழக்கு பகுதியில் 4 இந்திய கப்பல்களும் சிக்கின. இந்திய அரசு, வளைகுடா பிராந்தியத்தில் உள்ள அரசுகளுடன் இணைந்து பேச்சுவார்த்தை நடத்தி, ஹார்முஸ் ஜலசந்தியில் சிக்கியிருக்கும் கப்பல்கள் பாதுகாப்பாக வெளியேறுவதை உறுதி செய்துள்ளது. அதன்படி, எல்பிஜி ஏற்றி வரும் சிவாலிக் மற்றும் நந்தா தேவி ஆகிய 2 கப்பல்கள் தற்போது ஹார்முஸ் ஜலசந்தியை கடந்துள்ளன. இவற்றில் மொத்தம் 92,700 டன் எல்பிஜி (சமையல் எரிவாயு) ஏற்றி வரப்படுகிறது.

இதில் சிவாலிக் கப்பல் குஜராத்தில் உள்ள முந்த்ரா துறைமுகத்தை வரும் 16ம் தேதியும் (நாளை), நந்தா தேவி கப்பல் குஜராத்தின் கண்ட்லா துறைமுகத்தை வரும் 17ம் தேதியும் வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதே போல, ஹார்முசின் கிழக்கு பகுதியிலிருந்து பெட்ரோல் ஏற்றிய இந்திய எண்ணெய் கப்பல் ஜக் பிரகாஷ், ஓமனின் சோஹர் துறைமுகத்தில் இருந்து ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து ஆப்ரிக்காவின் தான்சாயாவில் உள்ள டாங்காவுக்கு செல்கிறது. அந்த கப்பல் வரும் 21ம் தேதி டாங்காவை சென்றடையும்.

ஈரான் அனுமதியுடன் இதுவரை 3 இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடந்துள்ளன. ஜலசந்தின் மேற்கில் 22 கப்பல்களும், கிழக்கில் 3 கப்பல்களும் இன்னும் சிக்கி உள்ளன. வளைகுடா பிராந்தியத்தில் உள்ள இந்திய கப்பல்கள் தயார் நிலையில் உள்ளன. இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்ய, இக்கப்பல்களின் பாதுகாப்பான மற்றும் தடையற்ற போக்குவரத்திற்காக சம்மந்தப்பட்ட அனைத்து நாடுகளுடனும் தொடர்பில் இருக்கிறோம். இந்திய அதிகாரிகள் நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருகின்றனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.

* எல்பிஜி கப்பல்களுக்கு முன்னுரிமை
நாட்டில் பற்றாக்குறை நிலவும் எரிபொருளான எல்பிஜி ஏற்றி வரும் கப்பல்களுக்கு முன்னுரிமை வழங்க முக்கிய துறைமுகங்கள் மற்றும் மாநில கடல்சார் வாரியங்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கப்பட்டுள்ளன. தற்போது உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து இந்திய துறைமுகங்களுக்கு 6 கப்பல்கள் வந்து சேர்ந்துள்ளதாகவும் அவை பாதுகாப்பாக நங்கூரமிடப்பட்டிருப்பதாகவும் பாரசீக வளைகுடாவில் கடல்சார் நிலைமையை ஒன்றிய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் அமைச்சகம் தொடர்ந்து உன்னிப்பாக கண்காணித்து வருவதாக சிறப்பு செயலாளர் ராஜேஷ் குமார் சின்ஹா கூறி உள்ளார்.

* 22 கப்பல்களில் என்ன இருக்கிறது?
ஹார்முஸ் ஜலசந்தியின் மேற்கு பகுதியில் 22 கப்பல்களும் கிழக்கு பகுதியில் 3 கப்பல்களும் சிக்கி உள்ளன. இதில், மேற்கு பகுதியில் உள்ள 22 கப்பல்களில் 6ல் எல்பிஜியும், 4ல் கச்சா எண்ணெயும், ஒன்றில் ரசாயன பொருட்களும் உள்ளன. 3 கப்பல்கள் சரக்கு கப்பல்கள். 2 கப்பல்கள் தாதுக்கள் ஏற்றப்பட்ட பெரிய சரக்கு கப்பல்கள். 3 கப்பல்கள் வழக்கமான பராமரிப்புக்கானவை. ஒரு கப்பல் காலியானது. மற்றொன்று கடல் கழிவுகளை அகற்றுவதற்கான கப்பல் என ஒன்றிய கப்பல் போக்குவரத்து அமைச்சக சிறப்பு செயலாளர் ராஜேஷ்குமார் சின்ஹா தெரிவித்துள்ளார்.

* ரஷ்ய எண்ணெய் வாங்குமாறு அமெரிக்கா கெஞ்சுகிறது: ஈரான்
ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி தனது எக்ஸ் பதிவில், ‘‘ரஷ்யாவிலிருந்து எண்ணெய் இறக்குமதியை நிறுத்துமாறு இந்தியாவை மிரட்ட அமெரிக்கா பல மாதங்கள் செலவிட்டது. ஆனால் ஈரானுடனான 2 வார போருக்குப் பிறகு வெள்ளை மாளிகை இப்போது இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளிடம் ரஷ்யா எண்ணெய் வாங்குமாறு கெஞ்சிக் கொண்டிருக்கிறது. ஈரான் மீதான போர் சட்டவிரோதமானது. இந்த சட்டவிரோத போரை ஆதரிப்பதன் மூலம் ரஷ்யாவுக்கு எதிராக அமெரிக்காவின் ஆதரவை பெற்றுத் தரும் என ஐரோப்பிய நாடுகள் நினைத்தன. ஆனால், ரஷ்ய கச்சா எண்ணெய் வாங்குவதில் டிரம்ப் நிர்வாகத்தின் தற்போதைய நிலைப்பாடு பரிதாபகரமானது’’ என்றார்.

Related Stories: