கொச்சியில் உள்ள ஈரான் போர்க்கப்பலில் இருந்து தேவையற்ற பணியாளர்கள் வௌியேற்றம்

புதுடெல்லி: கொச்சியில் உள்ள ஈரான் போர்க்கப்பலில் இருந்து தேவையற்ற பணியாளர்கள் வௌியேற்றபட்டனர். ஈரான், அமெரிக்கா, இஸ்ரேல் போர் காரணமாக மத்தியகிழக்கு நாடுகளில் அசாதாரண நிலை உள்ளது. இந்த சூழலில் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் கடந்த மாதம் நடந்த மிலன் 2026 கூட்டு பயிற்சியில் ஈரான் நாட்டின் ஐஆர்ஐஎஸ் டேனா என்ற போர்க்கப்பல் கலந்து கொண்டது. பின்னர் கடந்த 4ம் தேதி நாடு திரும்பிய ஐஆர்ஐஎஸ் டேனா மீது அமெரிக்க நீர்மூழ்கி கப்பல் நடத்திய தாக்குதலில் ஈரான் மாலுமிகள் 84 பேர் உயிரிழந்தனர். 32 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். இந்த சம்பவத்துக்கு முன்பாக, ஈரான் நாட்டின் ஐஆர்ஐஎஸ் லாவன் என்ற மற்றொரு போர்க்கப்பல் தொழில்நுட்ப கோளாறால் பாதிக்கப்பட்டது.

இது குறித்து ஈரானிய அதிகாரிகள் விடுத்த அவசர அழைப்பின்பேரில் ஐஆர்ஐஎஸ் லாவன் போர்க்கப்பலை கேரள மாநிலம் கொச்சியில் நிறுத்த அனுமதி அளிக்கப்பட்டது. அதன்படி மார்ச் 4ம் தேதி முதல் கொச்சியில் நிறுத்தப்பட்டுள்ள அந்த கப்பலில் 183 பணியாளர்கள் இருந்தனர். அவர்களில் பெரும்பாலானோர் கடற்படை மாணவர்கள் என்பதால் அவர்கள் அனைவரும் அங்குள்ள இந்திய கடற்படை வளாகங்களில் தங்க வைக்கப்பட்டனர். இதைத்தொடர்ந்து ஐஆர்ஐஎஸ் லாவன் கப்பலில் பழுது பார்க்கும் பணிகள் நடப்பதால், குறிப்பிட்ட சில ஊழியர்களை தவிர பிறர் ஈரானுக்கு திருப்பி அனுப்பப்படுவார்கள் என கூறப்பட்டிருந்தது. அந்த வகையில் துருக்கி நாட்டில் இருந்து வந்த சிறப்பு விமானம் மூலம் 133 பணியாளர்கள் ஈரானுக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர். மீதமுள்ள 50 பணியாளர்கள் கப்பல் பழுது பார்க்கும் பணிக்காக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.

Related Stories: