பிரதமர் பொதுக்கூட்டத்துக்கு முன்னதாக திரிணாமுல் தொண்டர்களுடன் பாஜவினர் மோதல்: மேற்கு வங்க அமைச்சர் வீடு மீது கல் வீச்சு

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் பிரதமர் மோடி பங்கேற்க இருந்த கூட்டத்திற்கு முன்னதாக பாஜ மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் மோதிக்கொண்டதால் பதற்றமான சூழல் ஏற்பட்டது. மேற்கு வங்க மாநிலத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு மாநில அளவில் பாஜ சார்பில் பரிவர்த்தன் யாத்திரை நடைபெற்றது. இதன் யாத்திரை நிறைவையொட்டி நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி நேற்று கலந்து கொண்டார். முன்னதாக பிரதமர் மோடி நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கு சுமார் அரைமணி நேரத்திற்கு முன்னதாக மத்திய கொல்கத்தாவில் பாஜ மற்றும் திரிணாமுல் தொண்டர்கள் இடையே மோதல் வெடித்தது.

பிரதமரின் பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்தில் இருந்து சுமார் 5 கி.மீ. தொலைவில் இந்த வன்முறை சம்பவம் வெடித்தது. இரு கட்சிகளின் ஆதரவாளர்களும் ஒருவர் மீது ஒருவர் கற்களை வீசி தாக்கிக்கொண்டனர். இதில், போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒருவர் காயம் அடைந்தார். இதனால் அந்த பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது. மேலும் வடக்கு கொல்கத்தா பாஜ மாவட்ட தலைவர் தமக்னோ கோஷ் மற்றும் அவரது கட்சியை சேர்ந்த பல தொண்டர்கள் காயமடைந்ததாகவும் பாஜ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்துக்கு சென்றுகொண்டு இருந்த பாஜ ஆதரவாளர்கள் தாக்கப்பட்டதாகவும், எந்தவித தூண்டுதலும் இன்றி கற்கள் வீசி தாக்கப்பட்டதாகவும் பாஜ தலைவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். அவர்கள் சென்ற வாகனங்களும் சேதமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில், திரிணாமுல் காங்கிரஸ் அமைச்சர் சசி பாஞ்சாவின் வீட்டின் மீது பாஜ ஆதரவாளர்கள் கல்வீசி தாக்கியதாக திரிணாமுல் தலைவர்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து சசி பாஞ்சா கூறுகையில், வீட்டிற்கு வெளியில் இருந்தவர்கள் வீசிய செங்கற்கள் என் வயிற்றின் மீது தாக்கியது. அலுவலக ஊழியர்கள் உட்பட கட்சியை சேர்ந்த பல ஆதரவாளர்கள் காயமடைந்தனர். தாக்குதல் நடத்தியவர்கள் என்னை கொல்ல முயன்றனர். இது திட்டமிட்ட தாக்குதல். பேருந்துகளில் சென்றவர்கள் செங்கற்கள், கண்ணாடி பாட்டில்கள், வெடிகுண்டுகளை எடுத்துச்சென்றனர்” என்று குற்றம்சாட்டினார்.

* பிரதமர் மோடி குற்றச்சாட்டு
கொல்கத்தாவில் பாஜ கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, பேரணி நடைபெறும் இடத்திற்கு பாஜ தலைவர்கள், தொண்டர்கள் வருவதை தடுக்கும் முயற்சியாக அவர்கள் மீது அனைத்து திசைகளில் இருந்தும் நெருக்கடிகள் கொடுக்கப்பட்டுள்ளது’ என்றார்.

Related Stories: