ராஜபாளையம், ஜன. 22: ராஜபாளையத்தில் நடுரோட்டில் உடும்பை ராஜநாகம் விழுங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. ராஜபாளையம் செண்பகத் தோப்பு செல்லும் சாலையில் நேற்று 15 அடிக்கு மேல் நீளம் உள்ள ராஜநாகம் ஒன்று உடும்பு ஒன்றை பிடித்து விழுங்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. அப்போது அந்த வழியாக சென்ற காந்திராஜா என்பவர், இதை பார்த்துவிட்டு உடன் சென்ற நண்பருடன் சேர்ந்து சாலையின் இருபுறமும் நின்றுகொண்டு வேறு வாகனங்கள் ஏதும் வராமல் தடுத்து நிறுத்தினார்.
பின்னர் சிறு குச்சி மூலம் சாலையில் தட்டி சப்தம் எழுப்பி பாம்பை வனப்பகுதிக்குள் பத்திரமாக அனுப்பி வைத்தனர். இதன்பிறகு அந்த வழியாக வாகன போக்குவரத்தை அனுமதித்தனர். ராஜநாகம் உடும்பை விழுங்கும் காட்சி தற்போது வைரலாகி வருகிறது.
