கோவை, ஜன. 22: கோவை மாவட்ட நிர்வாகம் சார்பில் 77-வது குடியரசு தின விழா வரும் 26-ம் தேதி வ.உ.சி மைதானத்தில் நடத்தப்பட உள்ளது. இதில், போலீசார், என்சிசி மாணவர்கள் ஆகியோரின் அணிவகுப்பு நிகழ்ச்சிகள் நடக்க உள்ளது. மேலும், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளது. இந்த கலை நிகழ்ச்சிக்கான ஒத்திகை மற்றும் தேர்வு நவ இந்தியா பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நேற்று நடந்தது.
இதில், பள்ளி மாணவ, மாணவிகள் குழு நடனம், தனி நபர் நடனம், பாரம்பரிய கலைகளான கரகாட்டம், ஒயிலாட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிக்கு ஒத்திகையில் ஈடுபட்டனர். இதில், ரத்தினபுரி, மசக்காளிபாளையம் மாநகராட்சி பள்ளிகள், கண்ணம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி உள்பட அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த ஏராளமான மாணவ, மாணவிகள் கலை நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
இந்த ஒத்திகையின் போது சிறப்பாக செயல்பட்ட பள்ளிகள் குடியரசு தின விழா நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளது குறிப்பிடத்தக்கது. சுமார், 12 பள்ளிகள் பங்கேற்கும் வகையிலான கலை நிகழ்ச்சிகள் குடியரசு தின விழாவின் போது நடக்க உள்ளது.
