ஈரோடு, ஜன. 22: ஈரோட்டில் தள்ளுவண்டியில் கால் டாக்சி மோதி காய்கறி வியாபாரி பலியானார்.
ஈரோடு முனிசிபல் காலனி கொங்கு நகர் பகுதியை சேர்ந்தவர் அர்ஜூனன் (80). இவர், தள்ளுவண்டியில் காய்கறி வியாபாரம் செய்து வந்தார். இவர், நேற்று காலை முனிசிபல் காலனி மெயின் ரோட்டில் தள்ளுவண்டியுடன் சாலையோரம் சென்று கொண்டிருந்தார். அப்போது, அந்த வழியாக கால் டாக்சி அர்ஜூனன் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது.
இதில், பலத்த காயமடைந்த அவரை அப்பகுதியினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த அர்ஜூனன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவலறிந்த ஈரோடு வடக்கு போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரித்தனர். தொடர்ந்து, விபத்து ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற கால் டாக்சியை ஈரோடு பேருந்து நிலையம் அருகே போலீசார் மடக்கி பிடித்து டிரைவர் சரவணனிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.
