கதர் கிராம நலவாரியத்தில் பனைபொருள் விற்பனை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

க.பரமத்தி, ஜன.28: கதர் கிராம நல வாரியத்தில் பனை பொருட்களின் விற்பனையை அதிகரிக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். க.பரமத்தி ஒன்றியத்தில் அணைப்பாளையம், அஞ்சூர், அத்திப்பாளையம், சின்னதாராபுரம், எலவனூர், கார்வழி, காருடையம்பாளையம், கோடந்தூர், குப்பம், புஞ்சைகாளகுறிச்சி, நடந்தை, க.பரமத்தி, பவித்திரம், நஞ்சைகாளகுறிச்சி, புன்னம், ராஜபுரம், சூடாமணி, தென்னிலை கிழக்கு, தென்னிலை மேற்கு, தென்னிலை தெற்கு, தொக்குப்பட்டி, துக்காச்சி, தும்பிவாடி உள்ளிட்ட 30-ஊராட்சிகள் உள்ளன. இதில் அனைத்து ஊராட்சிகளிலும் பரவலாக பனை மரங்கள் உள்ளன. கடந்த 21ஆண்டுகளுக்கு முன் கிராமங்களில் உள்ள விவசாயிகள் பனை மரங்களை கொண்டு வீடு கட்டியும், பனை ஓலைகளில் வீடுகளை வேய்ந்தும் வாழ்ந்து வந்தனர்.

இதனால் கோடைக்காலங்களில் வரும் வெக்கை, அம்மை நோய் தாக்கம் சற்று குறைவாக இருந்தது. பனை மரங்களில் இருந்து கிடைக்கும் பனை சோறு, நுங்கு, பதநீர் ஆகியவைகளை பலரும் விற்பனை செய்து பிழைத்து வந்தனர். பனை ஓலைகளில் இருந்து விசிறி, ஓலை பெட்டி பனைபாய் போன்றவை தயாரிப்பது, பல்வேறு நிகழ்ச்சிகளின் போது தோரண வாயிலில் நுங்குவை தொங்க விட்டு அழகு பார்ப்பது, மேலும் திருமண விழாவில் கிப்ட் கொடுக்கும் பல்வேறு பொருட்களும் பனைஓலைகளால் செய்ய பயன்படுத்தப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. தற்போது பதநீர் இறக்கும் தொழிலாளர்கள் வேறு தொழில்களுக்கு மாறிவிட்டனர். இதனால் பனை மரங்கள் செங்கல் சூளைகளுக்கும், பல்வேறு உணவு விடுதிகளுக்கும் எரிபொருளாக பயன்படுத்தப்படுகிறது.

இதுபற்றி விவசாயி ஒருவர் கூறுகையில், பதநீர் அருந்துவதன் மூலம் மனிதனுக்கு இயற்கையாகவே கால்சியம் சத்து கிடைத்தது. இதனால் 70 வயதிலும் கூட அசராமல் நடந்து சென்று கூலித்தொழிலுக்கு சென்று திரும்புவான். ஆனால் தற்போது 50 வயதாகி விட்டாலே கால்சியம் சத்து குறைவால் கால் முட்டியில் வீக்கம், கால் வலி போன்ற நோய்களால் பலரும் அவதிப்பட்டு வருவதை நாம் காண்கிறோம். எனவே, சத்து மிகுந்த பொருட்களை தரும் பனை மரத்தை பாதுகாக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் கதர் கிராம நலவாரியத்தில் பனை பொருட்களின் விற்பனையை அதிகரிக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Related Stories:

>