விவசாயிகளுக்காக ரூ.75 லட்சம் மதிப்பில் நடமாடும் மண் பரிசோதனை நிலையம்

சேலம், ஜன.12: சேலம் மாவட்ட விவசாயிகளின் பயன்பாட்டிற்காக ரூ.75 லட்சம் மதிப்பில் நடமாடும் மண் பரிசோதனை நிலையம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த 4 ஆண்டுகளாக வேளாண் துறைக்கென தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு, விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக, விவசாயிகளுக்கான பயிர் சாகுபடி, பயிர் பாதுகாப்பு, உற்பத்தி ெசய்த விளைபொருட்களை சந்தைப்படுத்துதல் உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளுக்கும் சலுகைகள் மற்றும் மானியங்கள் வழங்கப்படுகின்றன. மேலும், தரிசு நிலங்களை விவசாய நிலங்களாக மேம்படுத்திடவும், மண் வளத்தை பாதுகாக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இதனிடையே, கடந்த ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட வேளாண் பட்ஜெட்டில், சேலம் மாவட்டத்தில் விவசாயிகளின் பயன்பாட்டிற்காக நடமாடும் மண் பரிசோதனை நிலையம் அமைக்கப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டது. தொடர்ந்து இதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, ரூ.75 லட்சம் மதிப்பில் நடமாடும் மண் பரிசோதனை நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இதனை விவசாயிகளின் பயன்பாட்டிற்கு வழங்கும் நிகழ்ச்சி ேநற்று நடந்தது. மாவட்ட கலெக்டர் பிருந்தாதேவி தலைமை வகித்தார். மேயர் ராமச்சந்திரன் முன்னிலை வகித்தார். இதில் சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் கலந்துகொண்டு, வேளாண்மைத் துறையின் சார்பில் ரூ.75 லட்சம் மதிப்பிலான நடமாடும் மண் பரிசோதனை நிலைய வாகனத்தை கொடியசைத்து துவக்கி வைத்தார்.

பின்னர் சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் கூறியதாவது: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆட்சிப்பொறுப்பேற்றவுடன் விவசாயிகளின் நலன் காத்திடும் வகையில் வேளாண்மைத்துறைக்கென தனி நிதிநிலை அறிக்கையினைச் செயல்படுத்தி உள்ளார். அதன்படி கடந்த நான்கரை ஆண்டுகளில் பல்வேறு உழவர் நலன் காக்கும் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

அதன்படி, சேலம் மாவட்டத்திற்கென ரூ.75 லட்சம் மதிப்பிலான நடமாடும் மண் பரிசோதனை நிலைய வாகனம் தொடங்கி வைக்கப்பட்டு விவசாயிகளின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த நடமாடும் மண் பரிசோதனை நிலையங்கள் கிராமங்களுக்கே நேரடியாக சென்று விவசாயிகளின் வயல்களில் மண் மாதிரிகளை சேகரித்து ஆய்வு செய்யும். பின்னர் மண் வள அட்டைகளுடன் பயிர்களுக்கு ஏற்ப உர பரிந்துரையினை விவசாயிகளுக்கு வழங்கும் நோக்கில் இந்த நடமாடும் மண் பரிசோதனை நிலையம் நிறுவப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்தில் நடப்பாண்டில் 14,350 மண் மாதிரிகள் என்ற இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதில் 9,840 மண் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு மண் பரிசோதனை நிலையத்தின் மூலம் உரிய பகுப்பாய்வுகள் மேற்கொண்டு 8,260 விவசாயிகளுக்கு மண் வள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது.

இதனிடையே மண் பரிசோதனைக்கான கட்டணமாக இருந்த ரூ.300 ரத்து செய்யப்பட்டு, முற்றிலும் எவ்வித கட்டணமும் இல்லாமல் விவசாயிகளுக்கு ஆய்வு செய்து மண் வள அட்டை விநியோகிக்கப்பட்டு வருகிறது. தற்போது தொடங்கி வைக்கப்பட்டுள்ள நடமாடும் மண் பரிசோதனை நிலைய வாகனத்தின் மூலம் விவசாயிகள் மண் பரிசோதனை செய்து தங்கள் விவசாய நிலங்களில் வேளாண்மைத்துறை அலுவலர்கள் பரிந்துரைக்கும் உரங்களை இட்டு தங்கள் மகசூலை பெருக்கி பயனடைய வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், துணை மேயர் சாரதாதேவி, வேளாண்மை இணை இயக்குநர் சீனிவாசன், தோட்டக்கலை துறை துணை இயக்குநர் மஞ்சுளா, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) கமலம், வேளாண்மை விற்பனை மற்றும் வணிகத்துறை துணை இயக்குநர் சுஜாதா, வேளாண்மை உதவி இயக்குநர் (தரகட்டுப்பாடு) கவுதமன், வேளாண்மை பொறியியல் துறை செயற்பொறியாளர் (பொ) சிவக்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: