சேலம், மார்ச் 4:சேலம் அம்மாபேட்டையில் ஜவுளி வியாபாரி தவற விட்ட ரூ.2 லட்சம் பணத்தை மீன் வியாபாரம் பார்க்கும் பெண் கண்டெடுத்து ஒப்படைத்தார். சேலம் அம்மாபேட்டை பெரியகிணத்துதெருவை சேர்ந்தவர் மாசி மனைவி வள்ளி (40). மீன் வியாபாரி. இவர், நேற்று மாலை 6.30 மணியளவில் குமரகிரி ஏரி ரோட்டில் வந்துள்ளார். அப்போது, ரோட்டில் ஒரு பை கிடந்துள்ளது. அதனை எடுத்து பார்த்தபோது, உள்ளே கட்டுக்கட்டாக பணமும், ஒரு வங்கி கணக்கு புத்தகமும் இருந்துள்ளது. உடனே அப்பகுதியில் உள்ள வீடுகளில் வசிக்கும் மக்களிடம், `ரோட்டில் கிடந்து ஒரு பையை எடுத்தேன். அதனுள் கட்டுக்கட்டாக ரூ.2 லட்சத்திற்கு மேல் பணம் இருக்கிறது, அதனை தேடி யாரேனும் வந்து கேட்டால், என்னிடம் அனுப்பி வையுங்கள்’’ எனக்கூறிவிட்டு அங்கிருந்து சென்றுள்ளார்.
சிறிது நேரமாகியும் யாரும் பணத்தை தேடி வராதநிலையில், அதனை அம்மாபேட்டை போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்து விடலாம் என வீட்டில் இருந்து வள்ளி புறப்பட தயாராகியுள்ளார். அப்போது, அம்மாபேட்டை சுப்பிரமணியதெருவை சேர்ந்த ஜவுளி மொத்த வியாபாரியான ரமேஷ் என்பவர் வந்து, அந்த பணம் தன்னுடையது எனக்கூறியுள்ளார். உடனே அப்பகுதியை சேர்ந்த மக்கள் முன்னிலையில், அந்த பணம் இருந்த பையை ரமேசிடம் வள்ளி ஒப்படைத்தார். அவர், அவருக்கு நன்றி தெரிவித்துவிட்டு, அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். கீழே கிடந்து எடுத்த ரூ.2 லட்சம் பணத்தை நேர்மையாக உரியவரிடம் ஒப்படைத்த மீன் வியாபாரி வள்ளியை அப்பகுதி மக்கள் வெகுவாக பாராட்டினர்.
