போதையில் நிர்வாணமாக சுற்றிய போலீஸ்காரர்

காடையாம்பட்டி, பிப்.28: காடையாம்பட்டி அருகே இளம்பெண்ணை திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தி, குடிபோதையில் நிர்வாணமாக சுற்றிய போலீஸ்காரரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம், தீவட்டிப்பட்டி அருகே ஆண்டிகொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர் கணேசன் மகன் ஏழுமலை(29). இவர் போச்சம்பள்ளி தமிழ்நாடு சிறப்பு காவல்படை 7ம் அணியில் காவலராக பணிபுரிந்து வருகிறார். கடந்த 10 நாட்களுக்கு முன்பு, மருத்துவ விடுப்பில் ஊருக்கு வந்துள்ளார். இந்நிலையில், ஏழுமலைக்கும், அவரது மனைவி அகஸ்தியாவுக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, கணவரை பிரிந்து கடந்த ஒரு வாரமாக, தனது தந்தை வீட்டில் அகஸ்தியா இருந்து வருகிறார். இதனிடையே, ஏழுமலைக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன், கொங்குபட்டியை சேர்ந்த இளம்பெண் இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமாகியுள்ளார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை, இளம்பெண்ணின் வீட்டிற்கு குடிபோதையில் சென்ற ஏழுமலை, என் மனைவி என்னை விட்டு பிரிந்து சென்று விட்டாள். அதனால், நாம் இருவரும் திருமணம் செய்து கொள்ளலாம் எனக்கூறி அவரை கட்டாயப்படுத்தியுள்ளார். அதை அவர் ஏற்காமல், மனைவியுடன் சேர்ந்து வாழுமாறு கூறியுள்ளார். அதனை ஏற்காத ஏழுமலை, அவருடன் தகராறில் ஈடுபட்டு, அவரது வீட்டருகே ஆடைகளை அவிழ்த்து போட்டு, முழு நிர்வாணமாக மனநலம் பாதிக்கப்பட்டவர் போல் அப்பகுதியில் சுற்றி திரிந்துள்ளார். nஇதைப் பார்த்த அப்பகுதி மக்கள், ஏழுமலையை பிடித்து கை, கால்களை கட்டி போட்டு தீவட்டிப்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில், அங்கு வந்த எஸ்ஐ மோகன்ராஜ், ஏழுமலையின் உறவினர்களை வரவழைத்து, எச்சரித்து அவர்களுடன் அனுப்பி வைத்தார். இதையடுத்து, அவர் சேலம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

Related Stories: