சேலம், மார்ச் 4: சேலம் மாவட்டம், மாநகர பகுதியில் தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலை பொருட்களை விற்பனை செய்யும் கடைக்காரர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்து வருகின்றனர். கைதாகும் நபர்களின் கடைகளை பூட்டி சீல் வைக்கும் பணியை போலீ சாருடன் இணைந்து உணவு பாதுகாப்பு அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர். மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர்கள் அடங்கிய குழுவினர் மாவட்டம் முழுவதும் ஆய்வு நடத்தி வருகின்றனர். கடந்த 2 மாதத்தில் 130 கடைகள் ஆய்வு செய்யப்பட்டது. இதில், 120 கடைகளில் 119 கிலோ தடைசெய்யப்பட்ட நிக்கோட்டின் கலந்த புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. விதிமுறைகளை மீறி செயல்பட்ட அந்த கடைகளுக்கு ரூ.33 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், போலீசாருடன் இணைந்து தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட போதை பொருட்களை விற்ற 108 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து உணவு பாதுகாப்பு அதிகாரிகள் கூறியதாவது: வெளி மாநிலத்தில் இருந்து தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலை பொருட்களை கடத்தி வந்து, பெட்டி கடைகளுக்கு சப்ளை செய்யப்பட்டு வருவதாக புகார் எழுந்துள்ளது. இதனை தடுக்கும் வகையில் போலீசாருடன் இணைந்து சோதனையில் ஈடுபட்டு வருகிறோம். கடந்த 2 மாதத்தில் தடைசெய்யப்பட்ட குட்கா, புகையிலை பொருட்களை விற்ற 108 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. சீல் வைக்கப்பட்ட கடைகளின் உரிமம் ரத்து செய்யப்பட்டு வருகிறது. தொடர்ந்து அனைத்து கடைகளிலும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. தடைசெய்யப்பட்ட குட்கா, புகையிலை பொருட்களை விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் அந்த கடை உரிமையாளர் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
