சென்னை முழுவதும் 1,092 குற்றவாளிகள் குண்டர் சட்டத்தில் கைது: போலீஸ் கமிஷனர் அருண் நடவடிக்கையால் குற்றங்கள் குறைந்தது

சென்னை: கடந்த 2025ம் ஆண்டில் கொலை உள்ளிட்ட தொடர் குற்றங்களில் ஈடுபட்டு வந்த 1,092 குற்றவாளிகள் மீது போலீஸ் கமிஷனர் அருண் எடுத்த அதிரடி நடவடிக்கையால் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், கடந்த 2024ம் ஆண்டுடன் ஒப்பிடும் போது குற்றங்கள் சென்னையில் வெகுவாக குறைந்துள்ளது. சென்னை பெருநகர காவல் துறையில் போலீஸ் கமிஷனராக அருண் பதவியேற்ற பிறகு கடந்த காலங்களை விட மிகவும் குற்றங்கள் குறைந்துள்ளது புள்ளிவிபரங்களுடன் தற்போது தெரியவந்துள்ளது.

அதேநேரம் கமிஷனர் அருண் குற்றங்களை தடுக்க தனிப்பிரிவு, போதை பொருட்கள் ஒழிக்க தனிப்பிரிவு உருவாக்கி சென்னை மாநகரம் குற்றமில்லா நகரமாக உருவாக்கியுள்ளார். அதன்படி பார்த்தால் கடந்த 2023ம் ஆண்டு 105 கொலை நிகழ்வுகளும் 2024ம் ஆண்டு 105 கொலை நிகழ்வுகளும் நடந்துள்ளன. 2025ம் ஆண்டு, 93 கொலை நிகழ்வு வழக்குகள் மட்டுமே பதிவாகி உள்ளது. இவை கூடி சிறு சச்சரவுகள், திடீர் உணர்ச்சி வசப்படுதல், தவறான உறவு, பணம் ஏமாற்றியது, இடப்பிரச்சனை, மதுபோதையில் சண்டை போன்ற காரணங்களால் மட்டுமே நடந்துள்ளன. புதிதாக தொடங்கப்பட்ட ரவுடிகள் ஒழிப்பு பிரிவின் ஒருங்கிணைந்த தொடர் நடவடிக்கைகளின் காரணமாக ரவுடி கொலைகள் நடவாமல் தடுக்கப்பட்டுள்ளது.

அதேபோல், 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டு குற்ற நிகழ்வுகளின் புள்ளி விவரங்களுடன் ஒப்பிடுகையில், 2025 ஆம் ஆண்டு சென்னை பெருநகர காவலின் திறமையான நடவடிக்கையின் காரணமாக பதிவான வழிப்பறி, திருட்டு, செல்போன் பறிப்பு சம்பவங்கள் மற்றும் வாகன திருட்டுகள் வெகுவாகக் குறைந்துள்ளன. அதன்படி, 2023ம் ஆண்டில் 325 வழிப்பறி வழக்குகளும், 2024ம் ஆண்டில் 256 வழிப்பறி வழக்குகளும் பதிவாகி இருந்த நிலையில், 2025ம் ஆண்டில் தகுந்த குற்றத் தடுப்பு நடவடிக்கையினால், 180 வழிப்பறி வழக்குகள் மட்டுமே பதிவாகி உள்ளது.
கடந்த 2023ம் ஆண்டில் 424 செயின் மற்றும் செல்போன் பறிப்பு வழக்குகளும், 2024 ம் ஆண்டில் 310 செயின் மற்றும் செல்போன் பறிப்பு வழக்குகளும் தாக்கலாகியுள்ளன. காவல்துறையினரின் தீவிர ரோந்து, வாகன தணிக்கைகள் மற்றும் கண்காணிப்பு பணிகள் காரணமாக 2025 ம் ஆண்டில் 206 வழக்குகளாக பெருமளவில் குறைந்துள்ளது.

மேலும், 2023ம் ஆண்டில் 1,750 வாகன திருட்டு வழக்குகளும், 2024ம் ஆண்டில் பதிவான வாகன திருட்டு வழக்குகளின் எண்ணிக்கை 1,486 ஆக இருந்தது. 2025ம்ஆண்டு காவல் துறை உத்திகள் மற்றும் பிரத்யேக தொழில்முறை நடவடிக்கைகளால் 2025 ஆம் ஆண்டில் இது 1,092 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. சீரிய வாகனத் தணிக்கைகள், தகுந்த காவல் பணி செயலிகள் பயன்பாடு மூலம் சிறந்த வகையில் பாதுகாப்பை உறுதி செய்துள்ளன.

அதன்படி சென்னை பெருநகர காவல் எல்லையில் தொடர் குற்றங்களில் ஈடுபட்டு வந்ததாக 2023ம் ஆண்டில் 714 நபர்களும், 2024ம் ஆண்டில் 1,302 நபர்களும் குண்டர் தடுப்புக் காவலில் அடைக்கப்பட்டுள்ளனர். அதே 2025ம் ஆண்டில் தொடர் குற்றங்களில் ஈடுபட்ட 540 ரவுடிகள், 125 திருட்டு வழக்கு குற்றவாளிகள், 348 போதைப்பொருள் குற்றவாளிகள் உள்ளிட்ட 1,092 நபர்கள் மீது குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மீதான நடவடிக்கை:
பெண்களுக்கு எதிரான குற்றங்களில் அதிக முக்கியத்துவம் வழங்கி விசாரணை மேற்கொண்டு சட்ட நடவடிக்கைகள் மூலம் குற்றவாளிகளுக்குஉரிய தண்டனை பெற்று தந்தும், தொடர்ச்சியாக இக்குற்றங்களில் ஈடுபடும் நபர்களை கண்காணித்து சட்டப்படி மேலும் குற்ற செயல்களில் ஈடுபடாமல் தடுத்திடவும் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உரிய நீதி பெற்றுத் தந்திட காவல் அதிகாரிகள் முனைப்புடன் செயல்பட்டு பாதிக்கப்பட்ட பெண்ணை பின் தொடரவோ, அவரின் இணையதள நடவடிக்கைகளை பின் தொடரவோ கூடாது என்ற தடை உத்தரவை எதிரிகளிடமிருந்து பிரமாண பத்திரம் மூலமாக உத்தரவாதம் பெற்று, ஓராண்டு காலத்திற்கு தடை உத்தரவு பிறப்பித்து, மேற்கண்ட பாதுகாப்பு ஆணை உத்தரவு பாதிக்கப்பட்ட 23 பெண்களுக்கு கடந்த 2025ம் ஆண்டு வழங்கப்பட்டுள்ளது. போக்சோ வழக்குகளில் மட்டும் கடந்த 2025ம் ஆண்டு 66 குற்றவாளிகளுக்கு நீதிமன்ற விசாரணை மூலம் கடும் தண்டனை பெற்று தரப்பட்டுள்ளது.

மத்திய குற்றப்பிரிவில் 2025ம் ஆண்டில் ரூ.459.74 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் மீட்பு:
மத்திய குற்றப்பிரிவில் கடந்த 2025ம் ஆண்டில் தாக்கலான புகார்களின் பேரில் 661 வழக்குகள் பதிவு செய்யப்பட்டும், விசாரணையில் நிலுவையில் இருந்த 410 வழக்குகளின் விசாரணையை முடித்து உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த காலகட்டத்தில் 601 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் பிற மாநிலங்களில் இருந்து தொடர் நடவடிக்கைகளின் மூலம் 16 இணையக் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். தலைமறைவாக இருந்த குற்றவாளிகளுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட 747 பிடியாணைகள் மீது உரிய முக்கியத்துவம் வழங்கி தனிப்படைகள் மூலம் கைது செய்து பிடியாணைகள் நிறைவேற்றப்பட்டன. இதுதவிர மத்திய குற்றப்பிரிவு, 6,175 பொதுமனுக்களை பெறப்பட்டு விசாரித்து, அவற்றில் 5,474 மனுக்களுக்கு உரிய நடவடிக்கை எடுத்துள்ளது. குற்றச் சம்பவங்களில் சுமார் 886கோடியே 53 லட்சத்து 18 ஆயிரத்தி 744 ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் தொடர்பாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. விழிப்புணர்வுடன் கூடிய நடவடிக்கைகளின் விளைவாக சுமார் 459 கோடியை 74 லட்சத்து 69 ஆயிரத்தி 167 ரூபாய் மதிப்புள்ள அசையாச் சொத்துக்கள் பாதிக்கப்பட்டவர்களிடம் உரிய முறையில் திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளது.

2025ம் ஆண்டில் சைபர் க்ரைம் மூலம் ரூ.34.74 கோடி மீட்பு:
சென்னை பெருநகரில் கடந்த 2025ம் ஆண்டு மத்திய குற்றப்பிரிவின் சைபர் குற்றப்பிரிவு மற்றும் கிழக்கு, மேற்கு, தெற்கு மற்றும் வடக்கு மண்டலங்களின் இணை ஆணையாளர்கள் மேற்பார்வையில் செயல்பட்டு வரும் சைபர் குற்றப்பிரிவு காவல் நிலையங்களில், சைபர் க்ரைம் புகார் சார்ந்த வழக்குகளில் 177 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டும், இணைய வழி மூலமாக பல்வேறு சமூக வலைதள பதிவு மற்றும் தரவுகள் மூலம் பொதுமக்களை ஏமாற்றி பணம் பறித்த சைபர் குற்றவாளிகளின் உரிய தொடர்புகளை கண்டறிந்து வங்கி கணக்குகள் முடக்கப்பட்டு, மொத்தம் 34 கோடியே 74 லட்சத்து 48 ஆயிரத்து 243 ரூபாய் மீட்கப்பட்டு, 1,389 பாதிக்கப்பட்ட நபர்களின் வங்கி கணக்கில் மீண்டும் வரவு வைக்கப்பட்டுள்ளது.

சென்னை பெருநகர காவல் துறை, காவல் பணியோடு பொதுமக்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் பொருட்டு பல்வேறு அவசர அழைப்பு உதவி எண்கள், சமூக வலைதளங்கள் மூலம் புகார்களுக்கு உடனடி நடவடிக்கை மற்றும் தீவிர ரோந்துப்பணி வாகனங்கள் மூலம் கண்காணிப்பு செய்து குற்றங்களை தடுத்து பொதுமக்கள் நலனை கருத்தில் கொண்டு, மக்கள் எளிதில் தொடர்பு கொள்ளும் வகையில் போலீஸ் கமிஷனர் அருண் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து செயலாற்றி வருவது குறிப்பிடத்தக்கது. இது பொதுமக்களிடம் பெரும் வரவேற்ப்பை பெற்றுள்ளது.

Related Stories: