அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு; காளைகள், வீரர்களுக்கான முன் பதிவு இன்றுடன் நிறைவு!

 

மதுரை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை அவனியாபுரத்தில் வருகிற 15ம் தேதியும், பாலமேட்டில் 16ம் தேதியும், அலங்காநல்லூரில் 17ம் தேதியும் ஜல்லிக்கட்டு நடக்கிறது. இந்த போட்டிகளில் கலந்து கொள்ளும் மாடுபிடி வீரர்களுக்கான முன் பதிவு madurai.nic.in என்ற இணையதளம் மூலம் நேற்று மாலை 5 மணி முதல் தொடங்கியது. இன்று (08.01.2026) மாலை 5 மணி வரை பதிவு செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் போட்டியில் கலந்து கொள்ளும் காளைகளுக்கான பதிவும் இதே இணையதளத்தில் நேற்று தொடங்கியது.

இன்று மாலை 5 மணி வரை பதிவு செய்யலாம். அவனியாபுரம், பாலமேடு மற்றும் அலங்காநல்லூர் ஆகிய மூன்றில் ஏதேனும் ஒரு விழாவில் மட்டும் காளைகள் கலந்து கொள்ள அனுமதிக்கப்படும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன்படி நேற்று மாலை முதல் ஏராளமான மாடுபிடி வீரர்களும், போட்டியில் கலந்து கொள்ள உள்ள காளைகளின் உரிமையாளர்களும் இணையதளம் மூலம் தங்கள் பெயர்களை ஆர்வத்துடன் பதிவு செய்ய தொடங்கினர். சிலர் இணையதள மையங்களுக்கு நேரில் சென்று பதிவுகளை மேற்கொண்டனர். சிலர் செல்போன் மூலம் பதிவு செய்தனர். இன்று மாலை 5 மணிக்கு மேல் எவ்வளவு காளைகள், வீரர்கள் பதிவு செய்யப்பட்டு உள்ளனர் என்ற விவரம் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

முன்னதாக மதுரை மாவட்டத்தில் நடைபெறும் இந்த 3 ஜல்லிக்கட்டு போட்டிகளில் கலந்து கொள்ள இருக்கும் காளையுடன் ஒரு உரிமையாளர் மற்றும் காளையுடன் நன்கு பழக்கமுள்ள ஒரு உதவியாளர் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கான ஆன்லைன் முன்பதிவு செய்தவர்களின் சான்றுகள் முழுவதுமாக சரி பார்க்கப்பட்ட பின்னரே தகுதியான நபர்கள் மட்டுமே டோக்கன் பதிவிறக்கம் செய்ய இயலும். அவ்வாறு டோக்கன் பதிவிறக்கம் செய்த நபர்கள் மட்டுமே ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க அனுமதிக்கப்படுவார்கள் என்று மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

 

Related Stories: