செங்கரும்பு அறுவடை மும்முரம்

ஓமலூர், ஜன.8: ஓமலூர் வட்டாரத்தில் பொங்கலுக்கு முந்தைய செங்கரும்பு அறுவடை துவங்கியது. விவசாயிகள் நேரடியாக சந்தைகளில் ஒரு கரும்பு 50 ரூபாய்க்கு விற்பனை செய்கின்றனர். சேலம் மாவட்டம் ஓமலூர், காடையாம்பட்டி, தாரமங்கலம் வட்டாரத்தில் சுமார் 350 ஏக்கரில் செங்கரும்பு சாகுபடி செய்யப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகைக்கு ஒரு வாரமே உள்ள நிலையில், கரும்பு தோட்டத்தை குத்தகைக்கு எடுத்து வியாபாரிகள் அறுவடை பணியை முடுக்கி விட்டுள்ளனர். சிலர் நன்றாக விளைந்த கரும்பையும் 30 ரூபாய்க்கு கேட்பதால், சிறுகுறு விவசாயிகள் நேரடியாக விற்பனை செய்ய துவங்கியுள்ளனர். இந்நிலையில், பொங்கலுக்கு முந்தய செங்கரும்பு அறுவடை துவங்கியுள்ளது.

மக்கள் அதிகம் கூடும் இடங்கள், சாலை ஓரங்கள், வாரச்சந்தைகள் என தற்காலிக கடைகள் அமைத்து ஒரு கரும்பு 50 ரூபாய்க்கு விற்பனை செய்கின்றனர். மக்களும் ஆர்வத்துடன் வாங்கி செல்வதால் கூடுதல் வருவாய் கிடைப்பதாக கூறுகின்றனர். அதிக ஏக்கரில் சாகுபடி செய்த விவசாயிகள் மொத்தமாக தோட்டத்துடன் வியாபாரிகளுக்கு விற்று விட்டனர். குறைந்தளவில் சாகுபடி செய்த சிறுகுறு விவசாயிகள் அவர்களே அறுவடை செய்து நேரடி விற்பனை செய்கின்றனர். தற்போது கரும்பு விற்பனை அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Related Stories: