காரைக்குடி: திமுக-காங்கிரஸ் கூட்டணி பேச்சுவார்த்தை எப்போது தொடங்கும் என்பது குறித்து ப.சிதம்பரம் பரபரப்பு பேட்டி அளித்து உள்ளார். சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் முன்னாள் ஒன்றிய நிதி அமைச்சர் ப.சிதம்பரம், செய்தியாளர்களிடம் கூறியதாவது: வாக்காளர் பட்டியலில் சேர்க்க கோரி இதுவரை ஏழரை லட்சம் பேர் மனு கொடுத்துள்ளனர். தவறாக நீக்கப்பட்டவர்களை மீண்டும் வாக்காளர் பட்டியலில் சேர்க்க திமுக. காங்கிரஸ் கட்சிகள் இரண்டும் முனைப்பாக செயல்படுகின்றன.
வேறு எந்த கட்சியும் செயல்படுவதாக எனக்கு தெரியவில்லை. விழிப்புடன் இருந்து தேர்தல் ஆணையத்தின் சூழ்ச்சியை முறியடிக்க வேண்டும். இந்தியா கூட்டணியில் காங்கிரஸ் உள்ளது. பேச்சுவார்த்தைக்கு 5 பேரை காங்கிரஸ் தலைமை நியமித்துள்ளது. அவர்கள் முதல்வர், மற்ற தலைவர்களை ஒருமுறை சந்தித்துள்ளனர். அவர், நானும் ஒரு குழுவை அமைத்த பிறகு பேச்சுவார்த்தை தொடங்கலாம் என கூறியுள்ளார்.
திராவிடத்தில் தமிழ்நாடு ஒரு அங்கம். திராவிடம் என்பது அனைவருக்கும் தெரிந்த சொல். பல பாடல்களில் திராவிடம் என வருகிறது. திராவிட பொங்கல் என கூறுவது பிழை கிடையாது. சங்கராந்தி என பல மாநிலங்களில் கொண்டாடுகின்றனர். 5 தென்நாட்டு மாநிலங்களுக்கும் பொதுவான விழா. திராவிட பொங்கல் என கூறுவது பெரிய சர்ச்சைக்கு இடம் இல்லை. விஜய் முயற்சி வெல்லாது.
இந்தியா கூட்டணி தான் வெல்லும். தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு எத்தனை இடங்கள் என்பதை திமுக தலைவரும், காங்கிரஸ் தலைவரும் முடிவு செய்வார்கள். மற்றவர்கள் கருத்து சொல்லலாம், ஆனால் முடிவு இரண்டு பேரும் எடுப்பதுதான். ஆட்சியில் பங்கு, கூட்டணியில் பங்கு என்பதில் திமுக தலைவர், காங்கிரஸ் கட்சி தலைவர் எடுப்பதுதான் முடிவு. இதில் வேறு கருத்துக்கு இடம் இல்லை.
இந்தியாவிலேயே தமிழகம்தான் பொருளாதார வளர்ச்சியில் முதலிடம் வகிக்கிறது என ஒன்றிய அரசின் நிதி ஆயோக் தெளிவாக குறிப்பிடுகிறது. இதனை உ.பி.யுடன் ஒப்பிடுவதில் எனக்கு உடன்பாடு கிடையாது. 100 நாள் வேலைவாய்ப்பு திட்டம் பெயர் மாற்றம் கண்டனத்துக்கு உரியது. மகாத்மா காந்தி பெயரை நீக்கியது மிகப்பெரிய இமாலய பிழை. 100 நாள் வேலை கொடுக்கவே வழியில்லை; 125 நாள் எப்படி கொடுப்பார்கள்? 12 கோடி மக்கள் இந்த திட்டத்தை நம்பி உள்ளனர். இந்த திட்டத்தை ஒழித்து புதிய திட்டத்தை அறிமுகம் செய்ததை நாங்கள் கடுமையாக கண்டிக்கிறோம். இவ்வாறு கூறினார்.
