திருவண்ணாமலை, டிச.31: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், வைகுண்ட ஏகாதசியையொட்டி நேற்று அதிகாலை சொர்க்கவாசல் திறப்பு நடந்தது. கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். வைகுண்ட ஏகாதசியையொட்டி, வைணவ திருக்கோயில்களில் சொர்க்க வாசல் திறப்பு நடைபெறுவது வழக்கம். ஆனாலும், பிரசித்தி பெற்ற சிவாலயமான திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஆண்டுதோறும் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, அரியும், சிவனும் ஒன்றே என்று உணர்த்தும் வகையில், சொர்க்க வாசல் திறப்பது தனிச்சிறப்பாகும்.
அதன்படி, அண்ணாமலையார் கோயிலில் நேற்று அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு, சுவாமிக்கும், அம்மனுக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. அதேபோல், திருக்கோயில் 2ம் பிரகாரத்தில் அமைந்துள்ள பாமா ருக்மணி சமேத வேணுகோபால சுவாமி சன்னதியில், சுவாமிக்கு வெள்ளி கவசம் அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள், அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. அதைத்தொடர்ந்து, அதிகாலை 4.45 மணியளவில் வைகுந்த வாயில் (சொர்க்க வாசல்) திறப்பு நடைபெற்றது. பின்னர், வைகுந்த வாயிலில் இருந்து தீபமலைக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
அப்போது, அங்கு திரண்டிருந்த பக்தர்கள் பக்தி பெருக்குடன் கோவிந்தா, கோவிந்தா என முழக்கமிட்டபடி, சொர்க்க வாசலை கடந்து 3ம் பிரகாரத்துக்கு பக்தர்கள் சென்றனர். இதில் வெளிநாட்டு பக்தர்களும் வந்திருந்தனர். அதேபோல், மாட வீதியில் உள்ள பூத நாராயண பெருமாள் கோயிலில், சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடந்தது. பின்னர், கருட வாகனத்தில் எழுந்தருளிய பாமா ருக்மணி சமேத பூதநாராயண பெருமாள் மாட வீதியில் வலம் வந்து அருள்பாலித்தார். மேலும், கிரிவலப்பாதையில் உள்ள குபேர பெருமாள் கோயிலில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.
