பொதுமக்கள் வெகுநேரம் காத்திருப்பு செருவாவிடுதியில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி துணை இயக்குநர் ஆய்வு

பேராவூரணி, ஜன.21: பேராவூரணி அருகே உள்ள செருவாவிடுதி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், மருத்துவ பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெறுவதை மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் டாக்டர் ரவீந்திரன் நேற்று ஆய்வு செய்தார். ஆய்வுக்கு பிறகு அவர் கூறியது, செருவாவிடுதி ஆரம்ப சுகாதார நிலையத்தில் கடந்த மூன்று தினங்களாக கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இதுவரை, பேராவூரணி, சேதுபாவாசத்திரம், திருவோணம், பட்டுக்கோட்டை வட்டாரங்களை சேர்ந்த மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள் உள்ளிட்ட 130 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. யாருக்கும் எவ்வித பக்க விளைவுகளும் இல்லை. தடுப்பூசி போடுவதற்கு யாரும் பயப்பட வேண்டியதில்லை. சமூக வலைதளங்களில் வெளியாகும் வதந்தி காரணமாக ஒரு சிலர் தடுப்பூசி போட்டுக்கொள்ள அச்சப்படுகின்றனர். இதுகுறித்து யாரும் அச்சப்பட தேவையில்லை. தடுப்பூசி பாதுகாப்பானது. அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள முன்வர வேண்டும் என்றார். ஆய்வின்போது மாவட்ட மலேரியா அலுவலர் போத்திப்பிள்ளை, மாவட்ட தாய் சேய் நல அலுவலர் டாக்டர் அம்பிகா, தொற்றாநோய் தடுப்பு ஒருங்கிணைப்பாளர் டாக்டர் தினேஷ், வட்டார மருத்துவ அலுவலர் சௌந்தர்ராஜன் மற்றும் மருத்துவ பணியாளர்கள் உடன் இருந்தனர்.

Related Stories: