தொப்பூர் கணவாயில் பயங்கர விபத்து; வேன், கார், டூவீலர் மீது லாரி மோதி அக்கா, தம்பி உள்பட 4 பேர் பலி

தர்மபுரி: தொப்பூர் கணவாயில் டாரஸ் லாரி, மற்றொரு லாரி, வேன், டூவீலர், கார் மீது அடுத்தடுத்து மோதியதில் அக்கா, தம்பி உள்பட 4 பேர் உடல் நசுங்கி பலியாகினர். சேலம் மாவட்டம், இடைப்பாடியைச் சேர்ந்தவர் முனுசாமி(எ) முனியப்பன்(43). இவர், மகாராஷ்டிராவில் இருந்து கோழித்தீவனம் ஏற்றிய டாரஸ் லாரியை ஓட்டிக்கொண்டு, நாமக்கல்லுக்கு புறப்பட்டார். மாற்று டிரைவராக ஈரோட்டைச் சேர்ந்த வீரன்(46) உடன் வந்தார். தர்மபுரி மாவட்டம், தொப்பூர் கணவாய் இரட்டை பாலம் தாண்டி நேற்று காலை சென்றபோது, பிரேக் பிடிக்காததால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி, முன்னால் பார்சல் ஏற்றிச் சென்ற மற்றொரு லாரி மீது பயங்கரமாக மோதியது. தொடர்ந்து டூவீலர் மீது மோதி எதிர்திசைக்கு பாய்ந்து ஆம்னி வேன் மற்றும் கார் மீதும் மோதியது. இதில் லாரி உள்ளிட்ட வாகனங்கள் அப்பளம் போல் நொறுங்கியது.

இதில் மேச்சேரி கோயிலுக்கு டூவீலரில் சென்ற தர்மபுரி தம்மணம்பட்டியைச் சேர்ந்த அருணகிரி(38), அவரது அக்கா கலையரசி(40) மற்றும் காரில் வந்த சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த பன்னீர்செல்வம் மகன் தினேஷ்(30) ஆகிய 3 பேரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அருகில் உள்ள காவலர் குடியிருப்பில் வசிப்பவர்களும், பெட்ரோல் பங்க் ஊழியர்களும், தொப்பூர் போலீசாரும் மீட்பு பணியில் ஈடுபட்டனர். சென்டர் மீடியனில் மோதி நின்ற டாரஸ் லாரியில் இருந்து, டிரைவர் முனியப்பனையும், மாற்று டிரைவர் வீரனையும் மீட்டு தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் வழியிலேயே முனியப்பன் உயிரிழந்தார். வீரன் உள்பட 3 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

விபத்து நடந்த இடத்தை தர்மபுரி கலெக்டர் சதீஸ், எஸ்.பி. மகேஸ்வரன், வெங்கடேஸ்வரன் எம்எல்ஏ ஆகியோர் பார்வையிட்டு போக்குவரத்து சீர் செய்ய நடவடிக்கை எடுத்தனர். விபத்து குறித்து தொப்பூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த 2020 டிசம்பர் மாதம் இதேபோல் அடுத்தடுத்து 12 வாகனங்கள் மோதி விபத்து ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related Stories: