சென்னை: அரசியல் எதிரிகளை பழிவாங்க மத்திய அமைப்புகளை பாஜ தவறாக பயன்படுத்துகிறது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
திமுக தலைவர், முதல்வர் மு.க.ஸ்டாலின் ‘நேஷனல் ஹெரால்டு’ வழக்கு தீர்ப்பு குறித்து வெளியிட்டுள்ள சமூக வலைத்தளப் பதிவில் கூறியிருப்பதாவது:
நேஷனல் ஹெரால்டு வழக்கு தீர்ப்பின் மூலம், எதிர்க்கட்சி தலைவர்களைப் பழிவாங்குவதற்காக ஒன்றிய பாஜ அரசினால் மத்தியப் புலனாய்வு அமைப்புகள் தவறாகப் பயன்படுத்தப்படுவதை மீண்டுமொருமுறை நீதித்துறை அம்பலப்படுத்தியுள்ளது. சட்டரீதியான எந்தவொரு முகாந்திரமும் இன்றி, இத்தகைய வழக்குகள் அரசியல் எதிரிகளை துன்புறுத்தவும் களங்கப்படுத்தவுமே தொடரப்படுகின்றன.
உண்மையையும் அச்சமின்மையையும் தங்கள் பக்கம் கொண்டுள்ள நாடாளுமன்ற காங்கிரஸ் குழுத் தலைவர் சோனியா காந்தியும், மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தியும் தவறிழைக்காதது நிரூபணமாகியுள்ளது. ஆனாலும், மதச்சார்பின்மை மற்றும் அரசியலமைப்பின் மாண்பு நெறிகளில் அவர்கள் உறுதியாக நிற்பதைப் பொறுத்துக் கொள்ள முடியாத பாஜவானது காந்தி குடும்பத்தினரை தொடர்ந்து வேட்டையாடுவதில் குறியாக உள்ளது. பாஜவின் இந்த பழிவாங்கும் நோக்கம் நாட்டின் உயர் புலனாய்வு அமைப்புகளின் நம்பகத்தன்மையை மீண்டும் மீண்டும் சிதைத்து, அவற்றை வெறுமனே அரசியல் எதிரிகளை அச்சுறுத்துவதற்கான கருவிகளாகச் சுருக்குகின்றது. இவ்வாறு பதிவில் கூறப்பட்டுள்ளது.
