சென்னை: திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் வரும் 29ம் தேதி “வெல்லும் தமிழ்ப் பெண்கள்” திமுக மேற்கு மண்டல மகளிர் அணி மாநாடு நடக்கிறது. இதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார்.
திமுக தலைமைக் கழகம் நேற்று வெளியிட்ட அறிவிப்பு: திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் வருகிற 29ம் தேதி(திங்கட்கிழமை) மாலை 4 மணி அளவில் ‘‘வெல்லும் தமிழ்ப் பெண்கள்’’ திமுக மேற்கு மண்டல மகளிர் அணி மாநாடு நடக்கிறது. மாநாட்டிற்கு திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்பி தலைமை வகிக்கிறார். 1.31 கோடி மகளிருக்கு ‘கலைஞர் மகளிர் உரிமைத் தொகை’, ‘விடியல் கட்டணமில்லா பேருந்துப் பயணம்’, கல்வி கற்கும் மாணவிகளுக்கு ‘புதுமைப் பெண் திட்டம்’, வேலைக்குச் செல்லும் மகளிருக்கு பாதுகாப்பான ‘தோழி விடுதி’, இந்தியாவிலேயே அதிக அளவாக 43 சதவீதம் வேலைக்குப் போகும் பெண்களைக் கொண்ட மாநிலமாகத் தமிழ்நாடு திகழ்வதற்கான சூழல் என மகளிர் மேம்பாட்டுக்காக தொடர்ச்சியான திட்டங்களை வகுத்து வரும் தமிழ்நாடு முதல்வர் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றுகிறார்.
பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, துணைப் பொதுச்செயலாளர்கள் ஐ.பெரியசாமி, க.பொன்முடி, திருச்சி சிவா, ஆ.ராசா, அந்தியூர் ப.செல்வராஜ், மு.பெ.சாமிநாதன், அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, மகளிர் அணிச் செயலாளர் ஹெலன் டேவிட்சன், மகளிர் தொண்டர் அணிச் செயலாளர் நாமக்கல் ப.இராணி ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். கரூர் மாவட்ட திமுக செயலாளர் செந்தில்பாலாஜி எம்.எல்.ஏ. வரவேற்கிறார்.
இம்மாநாட்டினை அமைச்சர்கள் முத்துசாமி, மதிவேந்தன், கயல்விழி செல்வராஜ், கா.ராமச்சந்திரன்-மாவட்டச் செயலாளர்கள் பொறுப்பாளர்களான மேயர் என்.தினேஷ்குமார், என்.நல்லசிவம், தோப்பு வெங்கடாசலம், தொ.அ.ரவி, தளபதி முருகேசன், துரை செந்தமிழ்ச்செல்வன், கே.எம்.ராஜு, கே.ஆர்.என்.இராஜேஸ்குமார், கே.எஸ்.மூர்த்தி, எம்பிக்கள் கே.ஈஸ்வரசாமி, இ.பிரகாஷ், கணபதி ப.இராஜ்குமார், எம்எல்ஏக்கள் வி.சி.சந்திரகுமார், ஏ.ஜி.வெங்கடாசலம், பெ.இராமலிங்கம், ஆர்.இளங்கோ, க.சிவகாமசுந்தரி, இரா.மாணிக்கம் ஆகியோர் ஒருங்கிணைந்து ஏற்பாடு செய்வார்கள். நிறைவாக, திருப்பூர் மத்திய மாவட்டச் செயலாளர் திருப்பூர் க.செல்வராஜ் எம்எல்ஏ நன்றியுரையாற்றுகிறார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
