அண்ணா பன்னாட்டு விமான நிலையம் அருகில் ரூ.39.20 கோடியில் தமிழ்நாடு ஹஜ் இல்லம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல்

சென்னை: அண்ணா பன்னாட்டு விமான நிலையம் அருகில் ரூ.39.20 கோடியில் கட்டப்படவுள்ள தமிழ்நாடு ஹஜ் இல்லம் கட்டுமானப் பணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று அடிக்கல் நாட்டினார். இஸ்லாமியப் பெருமக்கள் வேலைவாய்ப்பு பெற்று வாழ்வில் ஏற்றம் பெறும் வகையில், கலைஞர் பிற்படுத்தப்பட்ட இஸ்லாமிய சமூகத்தினருக்கு 3.5 சதவீதம் தனி இடஓதுக்கீடு வழங்க சட்டம் இயற்றி இடஒதுக்கீடு வழங்கினார். மேலும், உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியம் அமைத்ததோடு, இஸ்லாமிய பெருமக்களின் நல்வாழ்விற்காக பல்வேறு நலத்திட்டங்களையும் செயல்படுத்தினார்.

கலைஞர் வழியில் செயல்படும் திராவிட மாடல் அரசு, தொன்மையான 6 தர்காக்களில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்த ரூ.5 கோடி நிதி, தமிழ்நாடு மாநில ஹஜ் குழுவிற்கு வழங்கப்பட்டு வரும் ஆண்டு நிர்வாக மானியம் ரூ.80 லட்சமாக உயர்த்தி வழங்கப்பட்டது. மேலும் 1 முதல் 8ம் வகுப்பு வரை அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் முஸ்லிம் மாணவியருக்கு தலா ரூ.1,000 கல்வி உதவித்தொகை, தமிழ்நாட்டில் இருந்து ஹஜ் புனித பயணம் மேற்கொள்ளும் பயனாளிகளுக்கு தலா ரூ.25,000 மானியம் வழங்குதல், மாவட்ட காஜிகளுக்கு மாதந்தோறும் ரூ.20 ஆயிரம் மதிப்பூதியம் வழங்குதல், இஸ்லாமியர் அடக்கம் செய்யும் இடமான கபர்ஸ்தான்களுக்கு புதிதாக சுற்றுச் சுவர் மற்றும் பாதை அமைக்க நிதியுதவி போன்ற பல்வேறு திட்டங்களை சீரிய முறையில் செயல்படுத்தி வருகிறது.

அந்த வகையில், ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்ளும் இஸ்லாமியர்களுக்காக – சென்னை விமான நிலையம் அருகில், தமிழ்நாடு ஹஜ் இல்லம் கட்டப்படும் என்று முதல்வர் கடந்த 3.3.2025 அன்று நடந்த நாகப்பட்டினம் மாவட்ட அரசு விழாவில் அறிவித்தார். அந்த அறிவிப்பிற்கிணங்க, ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்ளும் இஸ்லாமியர்கள் விமானம் புறப்படுவதற்கு ஒருநாள் முன்னர் தமிழ்நாடு மாநில ஹஜ் குழு அலுவலகத்தை அணுகி பயண நடைமுறைகளை நிறைவேற்றி விமான நிலையத்திற்கு புறப்படுவதற்கு ஏதுவாக சென்னை அண்ணா பன்னாட்டு விமான நிலையம் அருகில் ஒரு ஏக்கர் நிலப்பரப்பில் ரூ.39.20 கோடி மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள தமிழ்நாடு ஹஜ் இல்லம் கட்டுமானப் பணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று அடிக்கல் நாட்டினார்.

இப்புதிய தமிழ்நாடு ஹஜ் இல்லம் அடித்தளம் உள்பட நான்கு தளங்களுடன் கட்டப்படவுள்ளது. இக்கட்டிடத்தின் அடித்தளத்தில் வாகன நிறுத்துமிடம், தரைத் தளத்தில் ஹஜ் அலுவலகம், வரவேற்பறை, கூட்ட அறை, ஹஜ் பயணிகளின் உடைமைகளை பாதுகாக்கும் அறை, முதல் தளத்திலிருந்து நான்காவது தளம் வரை சுமார் 400 ஹஜ் பயணிகள் தங்கும் வகையில் மொத்தம் 100 படுக்கை அறைகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் கட்டப்பட உள்ளன.

விழாவில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் நாசர், தமிழ்நாடு மாநில ஹஜ் கமிட்டித் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான அப்துல் சமது, நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் காதர் மொகிதீன், மனிதநேய மக்கள் கட்சித் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான ஜவாஹிருல்லா, சட்டமன்ற உறுப்பினர்கள் கருணாநிதி, ராஜா, முகமது ஷாநவாஸ், அப்துல் வகாப், மஸ்தான், வரலட்சுமி மதுசூதனன் உள்ளிட்ட சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா, தலைமைச் செயலாளர் முருகானந்தம், தமிழ்நாடு மாநில ஹஜ் குழு செயலாளர் மற்றும் செயலாளர் சித்திக், பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை செயலாளர் சரவணவேல்ராஜ், செங்கல்பட்டு கலெக்டர் சினேகா, தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவர் அருண், துணைத் தலைவர் இறையன்பன் குத்தூஸ், சென்னை மாவட்ட காஜி உஸ்மான் மொகிதீன் உள்ளிட்ட மாவட்ட காஜிக்கள், தமிழ்நாடு மாநில ஹஜ் குழு உறுப்பினர்கள், கழக சிறுபான்மையினர் நல உரிமைப் பிரிவு செயலாளர் சுபேர்கான், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

விரைந்து பணிகளை முடித்து திறப்போம்
முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு: தமிழ்நாடு ஹஜ் இல்லம் – மார்ச் 3 அன்று அறிவித்தேன். இன்று (16.12.2025) அடிக்கல் நாட்டியிருக்கிறேன்! விரைந்து பணிகளை முடித்து திறந்து வைப்போம்.

Related Stories: