கேரள சிறை முன் தமிழக போலீசாரை தாக்கி தப்பியவர்; மலையில் பதுங்கிய ரவுடியின் மனைவி விஷம் குடித்து தற்கொலை: 2 மகள்களுக்கு தீவிர சிகிச்சை

நெல்லை: கேரள சிறைக்கு கொண்டு சென்ற போது தமிழக போலீசாரை தாக்கி தப்பி ஓடி கடையம் மலையில் பதுங்கிய பிரபல ரவுடியின் மனைவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். விஷம் குடித்த அவரது இரு பெண் குழந்தைகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தென்காசி மாவட்டம் கடையம் அருகே கல்யாணிபுரத்தை சேர்ந்தவர் பாலமுருகன்(40). இவரது மனைவி ஜோஸ்பினாள்(35). இவர்களுக்கு மகாலெட்சுமி, பிரியதர்ஷினி(9) என்ற இரட்டை மகள்களும், தர்ஷன் (5) என்ற மகனும் உள்ளனர். பிரபல ரவுடியான பாலமுருகன் மீது கொலை, கொள்ளை, வழிப்பறி, போதைப்பொருட்கள் கடத்தல் உள்ளிட்ட 80க்கும் மேற்பட்ட வழக்குகள் தமிழகம் மற்றும் கேரள காவல்நிலையத்தில் உள்ளது.

இந்நிலையில் பாலமுருகன் ஒரு வழக்கு தொடர்பாக கேரள மாநிலம், திருச்சூரில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அவரை விருதுநகர் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக அழைத்து வந்தனர். பின்னர் கேரள சிறைக்கு திரும்பி கொண்டு சென்ற போது பாலமுருகன் தப்பி ஓடி விட்டார். இதை தொடர்ந்து அவர் கடையம் அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சென்று பதுங்கினார். இதையறிந்து போலீசார் மலைக்குன்றில் ஏறி தேடியபோது, 5 போலீசார் மலையில் இருந்து இறங்க முடியாமல் தவித்தனர். பின்னர் மறுநாள் அவர்கள் தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் மீட்கப்பட்டனர். பாலமுருகனை போலீசார் தீவிரமாக தேடி வருவதை அறிந்த அவரது மனைவி ஜோஸ்பினாள் ஊத்துமலை அருகே உள்ள தெற்கு காவலாக்குறிச்சி மருதுபுரத்தில் உள்ள பாட்டி வீட்டுக்கு 3 குழந்தைகளையும் அழைத்துச் சென்றுவிட்டார்.

இந்நிலையில், கடந்த 8ம் தேதி ஜோஸ்பினாள் தனது மகள்களுக்கு விஷம் கொடுத்துவிட்டு தானும் விஷம் குடித்துள்ளார். இதில் 3 பேரும் மயங்கிய நிலையில் கிடந்ததை கண்ட அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டுநெல்லை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் நள்ளிரவு ஜோஸ்பினாள் பரிதாபமாக இறந்தார். 2 பெண் குழந்தைகளுக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து ஊத்துமலை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: