*மணல் மூடிய கடற்கரை சாலை
*அதிகாரிகள் மவுனம் களைவது எப்போது?
உடன்குடி : குலசேகரன்பட்டினம் பகுதியில் கடல் அரிப்பினால் சுமார் 100மீட்டர் தூரத்திற்கு தார் சாலை மணல் திட்டுக்களால் மூடப்பட்டுள்ளது.
தொடரும் கடல் அரிப்புகளால் கடற்கரை பகுதி மக்களின் வாழ்வாதாரம் கேள்விக் குறியாகியுள்ளது. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கடல் அரிப்பினை தடுத்திட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில் பிரசித்திப் பெற்ற முத்தாரம்மன் கோயில் உள்ளது. நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருவதுடன், கடற்கரையில் புனித நீராடுவதும் வழக்கம். மேலும் இயற்கை துறைமுகம், வாணிபம் நடந்து வந்த பகுதி என பல்வேறு சிறப்புகள் கொண்ட இந்த கடற்கரைப் பகுதியில் கடல் அரிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
குலசேகரன்பட்டினம் புறநகர் பகுதியில் இருந்து கடற்கரைக்கு செல்லும் கடற்கரை சாலையில் ஏற்பட்டுள்ள கடல் அரிப்பினால் கடற்கரை தார் சாலை முழுவதுமாக மண் திட்டுக்களால் மூடப்பட்டுள்ளது.
சுமார் 100 மீட்டர் தூரத்திற்கு 2 அடி உயரத்திற்கு மேல் மண் திட்டுகளால் சூழப்பட்டுள்ளது. இதன் காரணமாக அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.
கல்லாமொழி கடற்கரை பகுதியில் உடன்குடி அனல் மின் நிலையத்துக்கு துறைமுகம் அமைப்பதற்காக கடலில் சுமார் 8.5கி.மீ தூரத்திற்கு நவீன பாலம் அமைக்கப்பட்டு உள்ளதும், பல்வேறு பகுதிகளில் தூண்டில் பாலங்கள் அமைக்கப்பட்டு உள்ளதும் கடல் அரிப்புக்கு காரணம் என பல்வேறு தரப்பினர் கருத்துக்கள் கூறி வருகின்றனர்.
ஆனால் கடந்த சில மாதங்களாகவே திருச்செந்தூர் முருகன் கோயில் மட்டுமல்ல, அமலிநகர், ஆலந்தலை, குலசேகரன்பட்டினம், மணப்பாடு உள்ளிட்ட கடற்கரையோர மீனவ கிராமங்களிலும் பெரும் கடல் அரிப்பு ஏற்பட்டு வருகிறது. இதனால் கடற்கரையோர மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கபடுவதுடன், அவர்களின் எதிர்காலம் கேள்வி கூறியாகி உள்ளது.
குலசேகரன்பட்டினம் பகுதியிலும் அதிகமான கடல் அரிப்பு ஏற்பட்டு வருகிறது. சாலையில் இருந்து சுமார் 200 மீட்டர் தூரம் இருந்த கடல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கடல் அரிப்பினால் தற்போது சாலையை கடந்தும் அலைகள் வந்து செல்கிறது.
இதனால் அந்த சாலை முழுவதுமாக மணல் திட்டுக்களாகி மக்கள் பயன்படுத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளதுடன் அதிகரித்து வரும் கடல் அரிப்பினால் மக்கள் அச்சமடைந்து உள்ளனர். ஏராளமான பனை மரங்கள் தற்போது கடற்கரையில் கடல் அரிப்பினால் விழுந்து கொண்டிருக்கிறது.
பனை மரங்களை பாதுகாக்க அரசு சிறப்பு சட்டம் இயற்றியும், அரசு அதிகாரிகளின் அலட்சியத்தால் எந்த ஆய்வுகளும் நடைபெறவில்லை. எனவே மாவட்ட நிர்வாகம், மீன்வளத்துறையும் உரிய நடவடிக்கை எடுத்து சாலையில் மூடியுள்ள மணல் திட்டுக்களை அப்புறப்படுத்தி கடல் அரிப்பினை தடுத்திட உரிய நடவடிக்கை எடுத்திடவும், முறையான ஆய்வு நடத்திட வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
