திருவள்ளூரில் பள்ளி சுற்றுசுவர் விழுந்து உயிரிழந்த மாணவர் குடும்பத்துக்கு நிவாரணம் வழங்க முதல்வர் உத்தரவு

திருவள்ளூர் அருகே பள்ளி சுற்றுசுவர் விழுந்து உயிரிழந்த மாணவர் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். பள்ளி பக்கவாட்டு சுவர் இடிந்து விழுந்து மாணவர் உயிரிழந்த செய்தி அறிந்து துயரம் அடைந்தேன். உயிரிழந்த மாணவரின் குடும்பத்துக்கு அவரது உறவினர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன் என முதல்வர் தெரிவித்துள்ளார்.

மேலும் முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; “திருவள்ளூர் மாவட்டம், ஆர்.கே.பேட்டை வட்டம், அம்மனேரி கொண்டாபுரம், அரசு உயர்நிலைப்பள்ளியில் ஏழாம் வகுப்பு பயின்று வந்த மோஹித் (வயது 12) த/பெ. சரத்குமார் என்பவர் இன்று (16.12.2025) நண்பகல் 1.00 மணி அளவில் பள்ளியின் பக்கவாட்டு சுவர் இடிந்து விழுந்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்ற துயரகரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வருத்தமும் வேதனையும் அடைந்தேன்.

மேற்படி சம்பவத்தில் உயிரிழந்த மாணவரின் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்வதோடு, அவரது குடும்பத்திற்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து மூன்று இலட்சம் ரூபாய் வழங்கிடவும் ஆணையிட்டுள்ளேன்” என தெரிவித்துள்ளார்.

Related Stories: