* குறைதீர்வு கூட்டத்தில் கிராம மக்கள் மனு
வேலூர் : வேலூர் அருகே 75 ஆண்டுகளாக தனி ஊராட்சியாக இயங்கி வரும் சிறுங்காஞ்சியை, சதுப்பேரியுடன் இணைக்கக்கூடாது என்று அப்பகுதி மக்கள் வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த குறைதீர்வு கூட்டத்தில் மனு அளித்தனர்.
வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு கூட்டம் டிஆர்ஓ சிவசுப்பிரமணியன் தலைமையில் நேற்று நடந்தது. இதில் பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்று பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றனர்.
அதில், வேலூர் சாரதி மாளிகை பகுதியை சேர்ந்த ஒருவர் அளித்த மனுவில், வேலூர் சாரதி மாளிகை பகுதியில் பொது நடைபாதை மற்றும் மேம்பாலம் அருகே இருசக்கர வாகனங்கள் அதிகளவு நிறுத்தப்படுகிறது.
பொதுமக்கள் நடந்து செல்லும் பாதை முழுவதும் இருசக்கர வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளதால் பாதசாரிகள் நடந்து செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. மேலும் மேம்பாலம் அருகே வாகனங்கள் நிறுத்துவதால் பொதுமக்கள் இறங்கவும், சாலையை கடக்கவும் முடியாமல் சிரமப்படுகின்றனர். எனவே உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.
வேலூர் அடுத்த சிறுங்காஞ்சி கிராமத்தை சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் நேற்று ஒன்றாக கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்தனர். அவர்களை நுழைவாயிலில் போலீசார் தடுத்து நிறுத்தி 10க்கும் மேற்பட்டவர்களை மட்டுமே மனு அளிக்க அனுமதித்தனர்.
அவர்கள் அளித்த மனுவில், வேலூர் அடுத்த சிறுங்காஞ்சி கிராமம் 75 ஆண்டுகளாக தனி ஊராட்சியாக உள்ளது. இதனை தற்போது சதுப்பேரி ஊராட்சியுடன் இணைக்க அரசு அதிகாரிகள் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். இதுதொடர்பாக எங்களுக்கு எந்த ஒரு முன்னறிவிப்பும் அறிவிக்கவில்லை. சிறுங்காஞ்சி தனி ஊராட்சியாக இருக்கவேண்டும் என்பதே கிராம மக்களின் விருப்பம்.
மீறி இணைக்க முயன்றால் நாங்கள் அனைவரும் குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றை கலெக்டரிடம் கொடுத்துவிடுவோம். மேலும் 2026ம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலையும் புறக்கணிப்போம். எனவே, சிறுங்காஞ்சி ஊராட்சி தனி ஊராட்சியாகவே தொடர்ந்து செயல்பட வேண்டும். இவ்வாறு அதில் கூறியிருந்தனர்.
சத்துவாச்சாரி நேதாஜி நகரை சேர்ந்த பொதுமக்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: ‘நாங்கள் பல ஆண்டுகளாக இப்பகுதியில் வசிக்கிறோம். இங்கு வசிக்கும் தனிநபர் ஒருவர், பாதையை ஆக்கிரமித்தும், அங்குள்ள கழிவுநீர் கால்வாய் மீது சுற்றுச்சுவரும் எழுப்பியுள்ளார்.
இதனால் நாங்கள் அந்த வழியை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. கழிவுநீர் கால்வாய் அரசு இடமாகும். எனவே, பொதுமக்கள் பயன்படுத்தி வந்த பாதையை மீட்டு தரவேண்டும். ஆக்கிரமிப்பு செய்தவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.
வீட்டை அபகரித்து துரத்திய மருமகள்கள்: மூதாட்டி கண்ணீர் புகார்
வேலூர் அம்மணாங்குட்டை ராதாபாய்(75) என்பவர் அளித்த மனுவில், வேலூர் சலவன்பேட்டையில் ஒருவரிடம் இருந்து வீடு வாங்கி வசித்து வந்தேன். எனக்கு 3 மகன்கள், 3 மகள்கள். மகன்கள் 3 பேருக்கும் திருமணமாகிவிட்டது. 3 பேருமே இறந்துவிட்டனர்.
எனது 3 மருமகள்களில் 2 பேரை, எனது பெயரில் உள்ள வீட்டில் தங்கிக்கொள்ளும்படி இடம் கொடுத்தேன். அப்போது, எனக்கு உணவு வழங்கி பராமரித்துக்கொள்ளும்படி தெரிவித்தேன்.
ஆனால் என்னை தற்போது, 2 மருமகள்களும் வெளியே துரத்திவிட்டு எனது ரேஷன், ஆதார், வாக்காளர் அட்டை ஆகியவற்றை பறித்து எரித்து விட்டனர். தற்போது நான் மீன் மார்க்கெட் பகுதியில் ஆதரவற்ற நிலையில் தங்கியுள்ளேன். எனவே, எனக்கு சொந்தமான வீட்டை மீட்டு தர நடவடிக்கை எடுக்கவேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
