அரியலூர், டிச.15: அரியலூர் மாவட்டத்தில் மதிமுக செயற்குழு கூட்டத்தில் 8 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அரியலூரில் மேற்கொள்ளப்பட்டு வரும் பேருந்து நிலைய கட்டுமானப் பணிகளை விரைந்து முடித்து, மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மதிமுக செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அரியலூரிலுள்ள அக்கட்சியின் அலுவலக வளாகத்தில் நேற்று நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட இதர தீர்மானங்கள்: வரும் சட்டமன்றத் தேர்தலில், திமுக தலைமையிலான கூட்டணியில் நீடிப்பது, கட்சியின் அங்கீகாரம் பெறும் அளவுக்கு தொகுதிகளை கேட்டு பெறுவது, சட்டமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி மாபெரும் வெற்றிப் பெற களப்பணியாற்றுவது, தொடர் மழையின் காரணமாக சேதமடைந்த மக்காச்சோளம் போன்ற பயிர்களுக்கு இழப்பீட்டு தொகையை தமிழக அரசு வழங்கிட வேண்டும்.
விவசாயிகளுக்கு தேவையான யூரியா உள்ளிட்ட உரங்கள் தட்டுப்பாடின்றி கிடைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 8 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.முன்னதாக அக்கட்சியின் ஜெயங்கொண்டம் வடக்கு ஒன்றிய அவைத்தலைவர் கணேசன் மற்றும் குருவாடி தனபால் ஆகியோரின் மறைவுக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. கூட்டத்துக்கு அக்கட்சியின் மாவட்டச் செயலர் ராமநாதன் தலைமை வகித்தார். மாநில பொருளாளர் செந்தில்நாதன், சட்டமன்றத் உறுப்பினர் சின்னப்பா ஆகியோர் சிறப்புரையாற்றினர். கூட்டத்தில் மாவட்ட, மாநில, ஒன்றிய, நகர கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு பேசினர்.
