சீர்காழி, டிச.15: சீர்காழி அருகே வடகால் கிராமத்தில் பழுதடைந்த சாலையை சீரமைக்க வேண்டுமென்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே வடகால் கிராமத்தில் காயிதே மில்லத் தெரு, பிலால் தெரு, ஆசாத் தெருவில் உள்ள தார்சாலைகள் கடந்த சில ஆண்டுகளாக ஜல்லிகள் பெயர்ந்து பழுதடைந்த நிலையில் உள்ளது. சாலை பழுதடைந்துள்ளதால் பொதுமக்கள் நடந்து செல்வதற்கு மிகுந்த சிரமப்படுன்றனர்.
இதேபோல் அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் பல்வேறு சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். எனவே சாலைகளை சீரமைத்து தர வேண்டுமென அப்பகுதி மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். மாவட்ட நிர்வாகம் உடனடியாக பொதுமக்கள், வாகன ஓட்டிகள் நலன் கருதி பழுதடைந்த தெரு சாலையை சீரமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
