சிவகங்கை, டிச.15: மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவித்துள்ளதாவது:சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மைய தன்னார்வ பயிலும் வட்டம் சார்பில் சிவகங்கை கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் அருகில் உள்ள படிப்பு வட்டத்தில் பயிற்சி மையம் இயங்கி வருகிறது. குரூப் வகை தேர்வுகள், சீருடை பணியாளர் தேர்வுகள் உள்ளிட் பல்வேறு அரசு வேலைவாய்ப்பிற்கான போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் பயிற்சி மையத்தில் நடத்தப்பட்டு வருகிறது.
இப்பயிற்சி வகுப்புகளில் சம்பந்தப்பட்ட பாடப் பிரிவுகளில் அனுபவமிக்கவர்களும், போட்டித் தேர்வுகளுக்கு ஏற்கனவே பயிற்சி அளித்துள்ள வல்லுநர்களும் பயிற்சி அளித்து வருகின்றனர். பயிற்சி வகுப்புகளின் போது பாடக்குறிப்புகள் வழங்கப்பட்டு மாதிரித் தேர்வுகளும் நடத்தப்படுகிறது. பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விரும்புவோர் 04575-245225 என்ற தொலைபேசி எண்ணிலோ அல்லது மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை நேரிலோ அணுகி விபரங்கள் பெறலாம்.
தேர்வர்கள் பயன்பெறும் வகையில் தொடங்கப்பட்டுள்ள tamilnaducareerservices.tn.gov.in என்ற இணையத்தள முகவரியில் பெயர் மற்றும் விபரங்களை பதிவு செய்து போட்டித் தேர்வுகளுக்கான பாடக்குறிப்புகள், வினா விடைகள் மற்றும் புத்தகங்களை இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
