மரக்காணம், டிச. 15: மரக்காணம் அருகே மீன் பிடிக்க சென்றபோது கட்டுமரம் கவிழ்ந்து மீனவர் பலியானார். விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே பனிச்சமேடு மீனவர் கிராமம் கங்கை அம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் மணிகண்டன்(32). இவர் நேற்று முன்தினம் மாலை மீன் பிடிக்க அவருக்கு சொந்தமான கட்டுமரத்தில் தனியாக கடலுக்கு சென்று உள்ளார்.
அப்போது கடலில் வழக்கத்துக்கு மாறாக அலைகளின் சீற்றம் அதிகமாக இருந்துள்ளது. இதனால் கடல் அலைகளில் சிக்கி மணிகண்டன் சென்ற கட்டு மரம் கடலில் கவிழ்ந்துள்ளது. இதை பார்த்த அருகில் இருந்த மீனவர்கள் மணிகண்டனை காப்பாற்ற முயன்றனர். ஆனால் மணிகண்டன் கடலில் மூழ்கினார். தொடர்ந்து அவரை சக மீனவர்கள் தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு கட்டுமரம் கவிழ்ந்த பகுதியில் இருந்து சில மீட்டர் தூரத்தில் மணிகண்டனின் உடல் கரை ஒதுங்கியது.
இதை பார்த்த அவரது உறவினர்கள் மரக்காணம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில், இன்ஸ்பெக்டர் பரணிநாதன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கனகசெட்டிகுளத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து மணிகண்டனின் மனைவி அஸ்வினி கொடுத்த புகாரின் பேரில், மரக்காணம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
