பெங்களூரு, ஓசூரில் பதுங்கி இருக்கும் முக்கிய குற்றவாளியின் மனைவி, 20 பார்மசிஸ்ட்டுகளை கைது செய்ய முகாம்

புதுச்சேரி, டிச. 24: போலி மருந்து விவகாரத்தில் பெங்களூரு, ஓசூரில் பதுங்கி இருக்கும் முக்கிய குற்றவாளியின் மனைவி, 20 பார்மசிஸ்ட்டுகளை கைது செய்ய சிறப்பு புலனாய்வு குழு போலீசார் முகாமிட்டுள்ளனர். இவர்களை கைது செய்யும் பட்சத்தில் பல்வேறு உண்மைகள் வெளிவரும் என தெரிகிறது. புதுச்சேரியில் பிரபல நிறுவனம் பெயரில் போலி மருந்துகள் தயாரித்து, நாடு முழுவதும் விற்பனை செய்த சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரை சேர்ந்த ராஜா (எ) வள்ளியப்பனை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். விசாரணையில் அவர், பிரபல கம்பெனிகள் தயாரிக்கும் விலை உயர்ந்த மருந்துகளை போலியாக தயாரித்து உரிமம் பெற்ற, செயல்படாத ஏஜென்சிகள் மூலம் வடமாநிலங்களில் விற்றது தெரியவந்தது. மேலும் சிபிசிஐடி போலீசார், ராஜா வீட்டில் சோதனை நடத்தி பல கோடி மதிப்புள்ள சொத்து பத்திரங்கள், மருந்து இன்வாய்ஸ் ரசீதுகள், டைரி, பாஸ்போர்ட், ரூ.7 கோடி மதிப்புள்ள நகைகள் மற்றும் ரூ.20 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை கைப்பற்றினர். இந்த சம்பவம் புதுச்சேரி அரசியலில் பெரும் புயலை கிளப்பியது.

இதையடுத்து கவர்னர் கைலாஷ்நாதன் உத்தரவின்பேரில் அமைக்கப்பட்ட 10 பேர் அடங்கிய சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்தியது. இவ்வழக்கில் தொடர்புடைய சிவராந்தகத்தை சேர்ந்த விவேக் உள்பட 16 பேர் இதுவரை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். இதனிடையே புதுச்சேரியில் உரிமம் இல்லாமல் மருந்துகளை சேமித்து வைத்து விற்பனை செய்தல், காலாவதியான அல்லது போலி மருந்து, மூலப்பொருட்கள், பேக்கிங் பொருட்கள், பயன்பாடுகள் போன்ற முறைகேடுகள் குறித்து புதுச்சேரி மருந்து தரக்கட்டுபாடு அதிகாரிகள் சோதனை நடத்தினர். அதில் மருந்து உற்பத்தி நிறுவனங்கள், மொத்த விற்பனையாளர்கள் மற்றும் குடோன்கள் என 13 இடங்கள் கண்டறியப்பட்டு சீல் வைக்கப்பட்டது.

தொடர்ந்து, சிபிசிஐடி போலீசார், சிறையில் அடைக்கப்பட்ட ராஜாவை கடந்த 18ம் தேதி 7 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர். அப்போது, பணப்பட்டுவாடா யார், யாருக்கு செய்யப்பட்டது. அரசியல்வாதிகள், அதிகாரிகள் தொடர்பு குறித்து கிடுக்கிப்பிடி கேள்விகள் கேட்டு வருகின்றனர். இதற்கிடையே புதுச்சேரியில் போலி மருந்து வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரி பல்வேறு அமைப்புகள் கவர்னர் கைலாஷ்நாதனுக்கு கோரிக்கை விடுத்தனர். இந்த விவகாரத்தில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த நபர்களுக்கு தொடர்பு இருப்பதாலும், தேசிய அளவிலான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதாலும் இவ்வழக்கு விசாரணையை சிபிஐ மற்றும் என்ஐஏ அமைப்புகள் மேற்கொள்ள புதுச்சேரி கவர்னர் கைலாஷ்நாதன் நேற்று முன்தினம் பரிந்துரை செய்தார். இதனை தொடர்ந்து சிபிஐ மற்றும் என்ஐஏ அதிகாரிகள், விரைவில் இவ்வழக்கு விசாரணை துவங்க உள்ளனர்.

இதற்கிடையே ராஜாவிடம் விசாரணை நடத்தியதில் திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தது. இவரது தகவலின் பேரில் நேற்று முன்தினம் அரியாங்குப்பத்தை சேர்ந்த என்.ஆர்.காங்கிரஸ் பிரமுகர் என்.ஆர்.மணிகண்டன், பூத்துறை ஆனந்தராஜ், கோட்டக்குப்பத்தை சேர்ந்த குமரவேலு, முருங்கப்பாக்கத்தை சேர்ந்த செல்வராஜ் உள்பட 4 பேரை சிறப்பு புலனாய்வு குழு போலீசார் கைது செய்தனர். என்.ஆர்.காங்கிரஸ் பிரமுகர் மணிகண்டன், ராஜா நடத்தி வந்த போலி மருந்து தொழிற்சாலையின் பங்குதாரராக செயல்பட்டு வந்துள்ளார். மேலும், முருங்கப்பாக்கத்தை சேர்ந்த செல்வராஜ் கணக்காளராகவும், ஆனந்தராஜ், குமரவேலு ஆகியோர் போலி மருந்துகளுக்கு லேபிள் ஒட்டும் பணியில் ஈடுபட்டு வந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

ராஜாவின் 7 நாள் காவல் இன்று மாலையுடன் முடிவடைகிறது. அவரது தகவலின் பேரில் ராஜா நடத்தி வந்த கம்பெனியின் எம்டியும் அவரது மனைவியுமான ஞானபிரியா, பெங்களூருவில் பதுங்கி உள்ளார். அவரை கைது செய்ய சிறப்பு புலனாய்வு குழு போலீசார் அங்கு சென்று முகாமிட்டு அவரை தேடி வருகின்றனர். மேலும் மருந்து, மாத்திரைகளை தயாரிக்கும் கை தேர்ந்த 20 பார்மசிஸ்ட்டுகள் பணியில் இருந்துள்ளனர். இவர்கள் அனைவரும் ஓசூரை சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது. அவர்கள் சரியான முறையில் தயாரித்ததால் தான் இந்த மருந்துகளை சாப்பிட்ட யாரும் சாகவில்லை என்பது போலீசாருக்கு தெரியவந்துள்ளது. இதையடுத்து ஓசூரில் பதுங்கி இருக்கும் 20 பார்மசிஸ்ட்டுகளை கைது செய்ய ஓசூரில் முகாமிட்டு உள்ளனர். அவர்களை கைது செய்யும் பட்சத்தில் மேலும் பல தகவல்கள் கிடைக்கும். போலி மருந்து விவகாரத்தில் போலீசார் தீவிர விசாரணையில் பல ரகசியங்கள் தினம், தினம் வெளியாகிறது. இதனால் போலி மருந்து விவகாரத்தில் பெரிய நெட்வோர்க் செயல்பட்டிருப்பது தெரியவருகிறது. இச்சம்பவம், வரும் சட்டமன்ற தேர்தலில் பெரிய அளவில் எதிரொலிக்கும் என்பதால் அரசியல் பிரமுகர்கள் கலக்கத்தில் உள்ளனர்.

Related Stories: