தூத்துக்குடி, டிச. 24: தூத்துக்குடியில் பாட்டியை அரிவாளால் வெட்டிய பேரனை போலீசார் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி செல்வநாயகபுரத்தை சேர்ந்தவர் கருப்பாயி (65). இவரது மகன் டிஎம்சி காலனியை சேர்ந்த சுடலைமுத்து, கூலித்தொழிலாளி. இவரது மகன் மாரிமுத்து (23). கருப்பாயிக்கு பேரனான மாரிமுத்து அடிக்கடி அவரிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்து வந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு 7 மணியளவிலும் பாட்டி வீட்டிற்கு சென்ற மாரிமுத்து, தான் வீடு கட்டிக்கொண்டிருப்பதாகவும், அதற்கு பணம் வேண்டும் என்று கேட்டு அடம்பிடித்துள்ளார். கருப்பாயி பணம் தர மறுத்து மாரிமுத்துவை எச்சரித்து சத்தம்போட்டுள்ளார். இதில் ஆத்திரமடைந்த மாரிமுத்து, அங்கிருந்த அரிவாளை எடுத்து பாட்டியின் தலையில் சரமாரியாக வெட்டி விட்டு தப்பியோடி விட்டார். இதில் படுகாயமடைந்த கருப்பாயியை அக்கம்பக்கத்தினர் மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து தூத்துக்குடி வடபாகம் (பொறுப்பு) இன்ஸ்பெக்டர் ேஜசு ராஜசேகரன், எஸ்ஐ சிவக்குமார் மற்றும் போலீசார் வழக்கு பதிந்து மாரிமுத்துவை கைது செய்தனர்.
