வீட்டில் பதுக்கி வைத்த 9 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

உளுந்தூர்பேட்டை, டிச. 24: உளுந்தூர்பேட்டை அருகே வீட்டில் பதுக்கி வைக்கப்பட்ட 9 டன் ரேஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள எலவனாசூர் கோட்டை கீழப்பாளையம் கிராமத்தில் காவல் நிலையம் அருகே புகைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ராஜா என்பவர் வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்துள்ளார். அவர் அந்த கிராமத்தில் நியாய விலை கடைகளில் அரிசி போடும் தினம் மற்றும் மறுநாள் அந்தப் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்று விலையில்லா அரிசியை ஒரு கிலோ 5 ரூபாய் முதல் 7 ரூபாய் வரை கொடுத்து வாங்கி வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் அவர் வாங்கி இரு சக்கர வாகனத்தில் கொண்டு சென்ற அரிசி மூட்டைகளை எலவனாசூர் கோட்டை காவல் நிலையம் அருகே உள்ள வீட்டில் வைத்து இரவு நேரங்களில் மினி டெம்போக்கள் மூலம் வெளியூர்களுக்கு கடத்திச் செல்வதாக அந்தப் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பறக்கும் படை வட்டாட்சியர் அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதன் பேரில் விரைந்து சென்ற பறக்கும் படை தனி வட்டாட்சியர் மணிமேகலை அந்த வீட்டில் ஆய்வு செய்தார். அப்பொழுது அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த 9 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தார். மேலும் உணவுப் பொருள் கடத்தல் குறித்து தனி வட்டாட்சியர் மணிமேகலை எலவனாசூர்கோட்டை காவல் நிலையத்தில் புகைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ராஜா என்பவர் மீது புகார் அளித்துள்ளார்.

Related Stories: