சென்னை, டிச.24: சென்னை மாவட்டத்திற்குட்பட்ட 979 வாக்குச்சாவடி மையங்களில் நேற்று முதல் ஜனவரி 18ம் தேதி வரை அனைத்து நாட்களிலும் (பண்டிகை நாட்கள் நீங்கலாக) காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை, புதிதாக வாக்காளர் பெயர் சேர்த்தல், நீக்குதல் மற்றும் திருத்தம் மேற்கொள்ளுதல் ஆகியவற்றிற்கான படிவங்களை வழங்கிடவும், பூர்த்தி செய்த படிவங்களை பெறுவதற்கும் ஒவ்வொரு இடத்திலும். ஒரு வாக்குச்சாவடி நிலை அலுவலர் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தல்களின்படி, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியில், கணக்கெடுப்பு பணி நிறைவுற்று, வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த 19ம் தேதி வெளியிடப்பட்டது.
அதன்படி, சென்னை மாவட்டத்தில் 12,47,690 ஆண் வாக்காளர்களும், 13,31,243 பெண் வாக்காளர்களும் மற்றும் 743 இதர வாக்காளர்களும் என மொத்தம் 25,79,676 வாக்காளர்களின் பெயர்கள் வரைவு வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளது.
மேலும் 1,56,555 இறந்த வாக்காளர்கள், 12,22,164 இடம்பெயர்ந்தோர், 27,328 இல்லாதவர்கள், 199 இதர இன வாக்காளர்கள் மற்றும் 18,772 இரட்டை பதிவு வாக்காளர்கள் என மொத்தம் 14,25,018 வாக்காளர்களின் பெயர் நீக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்த வரைவு வாக்காளர் பட்டியல் சென்னை மாவட்டத்தில் 16 சட்டமன்ற தொகுதிகளின் வாக்காளர் பதிவு அலுவலர்களின் அலுவலகங்களிலும் (சென்னை மாநகராட்சியின் 4, 5, 6, 8, 9, 10, 13 ஆகிய மண்டல அலுவலகங்களில் உள்ள வாக்காளர் பதிவு அலுவலர்களின் அலுவலகங்களில்), மற்றும் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் சிறப்பு முகாம்களிலும் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் தங்களது பெயர் மற்றும் தங்கள் குடும்பத்தில் உள்ள வாக்காளர்களின் பெயர்கள் குறித்த விவரங்களை சரிபார்த்து கொள்ளலாம். வாக்காளர் பட்டியலில் இடம்பெறாதவர்கள் / தகுதியுள்ள வாக்காளர்கள் மற்றும் 1.1.2026 அன்று 18 வயது பூர்த்தி அடைந்த இளம் வாக்காளர்கள் படிவம் 6-ஐ பூர்த்தி செய்து தங்களது பெயர்களை சேர்க்கலாம். வாக்காளர் பட்டியலில் நிரந்தர இடமாற்ற பதிவுகள், இறந்தோர் மற்றும் ஆட்சேபனை தொடர்பான பெயர் நீக்கம் தொடர்பாக படிவம் 7ஐ பூர்த்தி செய்தும், சட்டமன்ற தொகுதிகளிலேயே ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு குடிபெயர்ந்து புதிய வசிப்பிடத்தில் உள்ளவர்களும், வேறு தொகுதிக்கு குடிபெயர்ந்தவர்களும் தங்கள் பெயரை அந்த பகுதியிலும்/ தொகுதியிலும் சேர்க்கவோ (அ) மாற்றவோ விருப்பப்பட்டால் படிவம் 8-ஐ பூர்த்தி செய்தும், அதற்கான ஆவண ஆதார நகல்களை இணைத்து சம்பந்தப்பட்ட சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட சென்னை மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் உள்ள வாக்காளர் பதிவு அலுவலரிடம் சமர்ப்பிக்கலாம்.
அதன்படி, சென்னை மாவட்டத்திற்குட்பட்ட 16 சட்டமன்ற தொகுதிகளிலும் உள்ள 979 வாக்குச்சாவடி மையங்களிலும் நேற்று முதல் ஜனவரி 18ம் தேதி வரை அனைத்து நாட்களிலும் (பண்டிகை நாட்கள் நீங்கலாக) காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை புதிதாக வாக்காளர் பெயர் சேர்த்தல், நீக்குதல் மற்றும் திருத்தம் மேற்கொள்ளுதல் ஆகியவற்றிற்கான படிவங்களை வழங்கிடவும், பூர்த்தி செய்து படிவங்களைப் பெறுவதற்கும் ஒவ்வொரு இடத்திலும். ஒரு வாக்குச் சாவடி நிலை அலுவலர் நியமிக்கப்பட்டுள்ளனர். தற்போது வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியல் ஒவ்வொரு வார்டு அலுவலகங்களிலும், வாக்குச்சாவடி மையங்களிலும் வைக்கப்பட்டுள்ளது. மேலும் தேர்தல் இணைய தளத்திலும் (VOTERS’ SERVICE PORTAL) பார்வையிட்டு தெரிந்து கொள்ளலாம்.
இதனைப் பார்வையிட்டு வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள், வாக்காளர் பெயர் சேர்த்தல், நீக்குதல் மற்றும் திருத்தம் மேற்கொள்ளுதல் ஆகியவற்றிற்கானப் படிவங்களை இங்கு நியமிக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி நிலை அலுவலரிடம், படிவங்களைப் பெற்று பூர்த்தி செய்து வழங்கிடலாம். இது தொடர்பான மேலும் விவரங்களுக்கு பெருநகர சென்னை மாநகராட்சியின் கட்டுப்பாட்டு மைய எண் 1913ல் தொலைபேசியின் வாயிலாக கேட்டும் தெரிந்து கொள்ளலாம். https://voters.eci.gov.in என்ற இணையதளம் மூலமாகவும், தங்களுடைய பெயர் சேர்த்தல், நீக்கம் மற்றும் திருத்தங்கள் மேற்கொள்ளலாம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
