ஊட்டி அருகே லாரிக்கு வழிவிட்டபோது அரசு பஸ் மீது சாய்ந்து விழுந்த மின்கம்பம்

ஊட்டி, டிச. 13: ஊட்டி அருகே அரசு பஸ் மீது மின் கம்பம் விழுந்து விபத்து ஏற்பட்டது. ஊட்டியில் இருந்து பெந்தட்டி கிராமத்திற்கு நாள்தோறும் அரசு பஸ் இயக்கப்படுகிறது. எப்பநாடு, கொரனூர், கெங்கமுடி பகுதியை சேர்ந்த பொதுமக்களும் இந்த பஸ்சை பயன்படுத்தி வருகின்றனர். இந்த பகுதிக்கு இந்த ஒரு பஸ் மட்டும் இருப்பதால் எப்போதும் பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்படும். இந்நிலையில், நேற்று மதியம் 40 பயணிகளுடன் பெந்தட்டியில் இருந்து ஊட்டி நோக்கி வந்து கொண்டிருந்த அரசு பஸ்சை டிரைவர் ஜெயபிரகாஷ் ஓட்டினார். கண்டக்டராக ரவிக்குமார் இருந்தார். பாரஸ்ட் கேட் பகுதியில் எதிரில் லாரி வந்ததால் பஸ் வழிவிட்டு ஒதுங்கி நின்றது. அப்போது லாரியும் பஸ்சும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டதால் லாரி சாலையை விட்டு சற்று கீழே இறங்கியது.

அப்போது எதிர்பாராத விதமாக லாரி சாலையோரம் இருந்த மின்கம்பம் மீது உரசி மின்கம்பம் சாய்ந்தது. அதே சமயம், எதிரில் இருந்த மற்றொரு மின்கம்பம் அரசு பஸ் மீது விழுந்தது. இதனால் பேருந்தின் மேற்கூரை சேதமடைந்தது. இதனைக்கண்ட பயணிகள் அனைவரும் உடனடியாக பேருந்திலிருந்து கீழே இறங்கினர். அப்போது அதிர்ஷ்டவசமாக மின்ஒயர் அறுந்துவிட்டதால் பஸ் மீது மின்சாரம் பாயாமல் பயணிகள் உயிர் தப்பினர். உடனடியாக இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு வந்த மின்வாரிய அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மின் ஒயர்களை சரி செய்தனர். அதன்பின் அங்கிருந்து அரசு பஸ் ஊட்டி நோக்கி சென்றது. இச்சம்பவம் காரணமாக ஊட்டி- தேனோடுகம்பை வழித்தடத்தில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Stories: