மசினகுடி, சிங்காரா வனச்சரக பகுதிகளில் சாலையோரங்களில் புதர்கள் அகற்றம்: மனித-வனவிலங்கு மோதலை தடுக்க நடவடிக்கை

ஊட்டி,பிப்.28: வனப்பாதுகாவலர் மற்றும் முதுமலை புலிகள் காப்பக கள இயக்குநர் கிருபாசங்கர் மற்றும் துணை இயக்குநர் வித்யாதர் ஆகியோர் அறிவுறுத்தலின் பேரில், சிங்காரா வனச்சரத்தின் கட்டுப்பாட்டிலுள்ள வாழைத்தோட்டம்,கொப்பர கடவு பகுதிகள், மசினகுடி வனச்சரக்கத்தின் கட்டுப்பாட்டிலுள்ள மாயார், பூதநத்தம்,யானைப்பாடி,ஆச்சக்கரை ஆகிய பகுதிகளில் தலா 3 கிமீ தூரம் சாலையோரத்தில் புதர் செடிகள் அகற்றப்பட்டன.

மாயார் பகுதியில், மின்சார வாரியத்திற்குச் சொந்தமான நிலங்களிலும் சம்பந்தப்பட்ட துறையின் அனுமதி பெற்று, வனத்துறை மூலம் புதர்கள் அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.இந்த நடவடிக்கை பொதுமக்கள் நீண்டகாலமாக முன்வைத்து வந்த கோரிக்கையின் அடிப்படையில் செயல்படுத்தப்பட்டுள்ளது.

புதர்கள் அதிகமாக இருந்த காரணத்தால் ஏற்பட்ட மனித-வனவிலங்கு மோதல் அபாயம், பாதுகாப்பு சிக்கல்களைத் குறைக்கும் வகையில் இந்த பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த பணிகள் சிங்காரா மற்றும் மசினகுடி வன சரக அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் மூலம் மேற்கொள்ளப்பட்டது. சாலையோர மற்றும் குடியிருப்பு பகுதிகளில் இருந்த அடர்ந்த புதர்கள் அகற்றப்பட்டதால், மனித-வனவிலங்கு மோதல் ஏற்படும் அபாயம் குறையும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.

 

Related Stories: