பாலக்காடு, பிப். 27: கேரள அரசு பஸ் டிரைவர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். பஸ்சை பயணி கட்டுப்படுத்தியதால் விபத்து தவிர்க்கப்பட்டது. கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டம் சென்னித்தலாவைச் சேர்ந்தவர் பிரதீப் (50). இவர், கேரள மாநில அரசு பஸ்சில் பத்தனம்திட்டா டிப்போவில் டிரைவராகப் பணிபுரிந்தார். இவர் நேற்று பத்தனம்திட்டா அரசு பஸ் நிலையத்திலிருந்து செங்கனூருக்கு பயணிகளுடன் பஸ்சை இயக்கிச்சென்றார். மாவேலிக்கரா அருகே சென்றபோது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது.
இதனால் அவரால் பஸ்சை சரிவர இயக்க முடியவில்லை. இதை பஸ்சில் இருந்த ஆண் பயணி ஒருவரிடம் டிரைவர் தெரிவித்துள்ளார். அந்த பயணி பஸ்சை கட்டுப்படுத்தினார். எனினும் பஸ் அங்கிருந்த கடை மீது இடித்தபடி நின்றது. பஸ் நின்றதும் டிரைவர் பரிதாபமாக உயிரிழந்தார். பஸ்சில் இருந்த பயணித்த சிலர் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர். மாரடைப்பு ஏற்பட்டும் பெரிய விபத்து ஏற்படாமல் தடுத்துவிட்டு டிரைவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
