10,12ம் வகுப்பிற்கு இன்று திறப்பு: குளித்தலை அரசு ஆண்கள் பள்ளியில் முன்னேற்பாடு பணிகள்

குளித்தலை, ஜன. 19: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பால் கடந்த மார்ச் மாதம் முதல் பத்து மாத காலமாக பள்ளி, கல்லூரிகள் மாணவ, மாணவிகளின் நலன் கருதி மூடுவதற்கு தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் இந்த ஆண்டு 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வு எழுதும் கட்டாய நிலையில் இருப்பதால் மீண்டும் பள்ளியை திறக்க கல்வித்துறை சார்பில் பெற்றோர்கள் தரப்பில் ஆலோசனைகளை பெறப்பட்டு இறுதியாக 19 ம் தேதியிலிருந்து 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு பாடம் நடத்த பள்ளிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டிருந்தது. அந்த உத்தரவில் கொரோனா கால விதிமுறைகளை பள்ளி மாணவர்கள் எவ்வாறு கடைப்பிடிக்க வேண்டும். பள்ளி வகுப்பறைகளை கிருமி நாசினிகளை தெளித்து தூய்மையாக வைத்திருக்க வேண்டும். கழிப்பறைகளை தினம் தோறும் சுத்தப்படுத்தி தூய்மையாக வைத்திருக்க வேண்டும். பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு நுழைவுவாயிலில் கிருமி நாசினி தெளித்து அவர்களுக்கு முககவசம் கட்டாயம் அணிந்து வர வேண்டும் என வலியுறுத்த வேண்டும். தினந்தோறும் அவர்களுக்கு தமிழக அரசால் வழங்கப்பட்ட சத்து மாத்திரைகளை வழங்க வேண்டும் என பல்வேறு விதிமுறைகளுடன் அறிவிப்பை வெளியிட்டு இருந்தனர் .

இந்நிலையில் இன்று முதல் 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு பள்ளி மாணவ, மாணவிகள் வர இருப்பதால் முன்னேற்பாடு குறித்து கரூர் மாவட்டம் குளித்தலை சப்.கலெக்டர் ஷேக் அப்துல் ரகுமான் குளித்தலை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, நங்கவரம் அரசு பள்ளி உள்ளிட்ட பள்ளிகளை பார்வையிட்டு அரசு விதிமுறைகளின் படி அனைத்து ஏற்பாடுகளும் நடைபெற்று வருகிறதா என ஆய்வு செய்தார். அதில் ஒரு சில பள்ளிகளில் பணிகள் சரிவர செய்யப்படாததால் தலைமையாசிரியரிடம் உடனடியாக பணிகளை தீவிரப்படுத்தி மாணவர்களுக்கு எவ்வித இடர்பாடு இல்லாத வகையில் தூய்மையாக வைத்திருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தினார். அப்போது தாசில்தார் முரளி, ஆர்ஐ துரை, பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் உடன் இருந்தனர். அதனை தொடர்ந்து கல்வி அதிகாரிகளும் அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும் சென்று தூய்மை பணிகள், வகுப்பறையில் முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு செய்தனர்.

Related Stories:

>