கூடலூர், டிச. 10: கூடலூரை அடுத்துள்ள தேவர்சோலை பேரூராட்சிக்கு உட்பட்ட பொழம்பட்டி முதல் மச்சிக்கொல்லி வரை செல்லும் சுமார் 3 கி.மீ தூர சாலையை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி கிராம மக்கள் நேற்று திரளாக வந்து தேவர்சோலை பேரூராட்சி அலுவலகத்தில் செயல்அலுவலர் பிரதீப்குமாரிடம் மனு அளித்தனர். இந்த சாலையை சீரமைக்க பலமுறை கோரிக்கை விடுத்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் அவர்கள் புகார் தெரிவித்தனர். இதற்கு செயல்அலுவலர் தரப்பில் தற்காலிகமாக சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள உறுதியளித்தும் பொதுமக்கள் முழுமையாக சாலையை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதனைத்தொடர்ந்து இதற்கான நிதி ஒதுக்கீடு கிடைத்ததும் சாலை சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் என செயல்அலுவலர் கிராம மக்களிடம் தெரிவித்தார். இதையடுத்து கிராம மக்கள் அங்கிருந்து சென்றனர்.
