நிலச்சரிவு ஏற்படும் இடத்தில் மரங்கள் வெட்டி கடத்தப்படுவதாக கிராம மக்கள் புகாரால் பரபரப்பு

 

குன்னூர், டிச.10: குன்னூர் அருகே நிலச்சரிவு ஏற்படும் இடத்தில் மரங்கள் வெட்டி கடத்தப்பட்டு வரும் சம்பவத்தால் கிராம மக்கள் அச்சமடைந்து வருகின்றனர். நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மண்சரிவு மற்றும் நிலச்சரிவு ஏற்படும் இடங்கள் உள்ளன. அந்த இடங்களில் வருவாய் துறை அதிகாரிகள் மரங்கள் வெட்டுவதற்கும், பாறைகள் உடைப்பதற்கும் தொடர்ந்து தடை விதித்து வருகின்றனர். குறிப்பாக மரங்களை வெட்டுவதற்கு வனத்துறையினர் அனுமதி தர மறுத்து வருகின்றனர்.

இந்நிலையில் குன்னூர் பெள்ளட்டிமட்டம் அடுத்துள்ள எமகுண்டு கிராமத்தில் உள்ள ஓர் தனியார் தேயிலை தோட்டத்தில் நிலச்சரிவு ஏற்பட வாய்ப்புள்ளதாக கருதப்பட்ட இடத்தில் இருக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட மரங்கள் அனுமதி இல்லாமல் வெட்டப்பட்டு வருவதாக இயற்கை ஆர்வலர்கள் மத்தியில் குற்றசாட்டுகள் எழுந்துள்ளது. இந்த இடம் நிலச்சரிவு அபாயமுள்ள இடம் என்று வருவாய் துறையினரால் கண்டறியப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனிடையே அப்பகுதியில் மரங்கள் வெட்டி கடத்தப்பட்டு வரும் சம்பவம் அப்பகுதியில் சர்ச்சை ஏற்பட்டு வரும் நிலையில் மரங்களை அவசர அவசரமாக கடத்தும்போது பெள்ளட்டிமட்டத்திலிருந்து எமகுண்டு கிராமத்திற்கு செல்லும் குடிநீர் குழாயில் மர கட்டைகள் விழுந்து, குடிநீர் குழாய்கள் சேதமானது.

Related Stories: