காசி தமிழ் சங்கமம் 4.0 தொடக்கம்

 

வாரணாசி: காசி தமிழ் சங்கமம் 4.0 நேற்று தொடங்கியது. இந்தவிழாவில் கலந்து கொண்ட ஒன்றிய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திரபிரதான் கூறுகையில்,’ பிரதமர் மோடியின் தலைமையில் காசி மற்றும் தமிழ்நாட்டிற்கு இடையே ஒரு அறிவுப் பாலம் உருவாக்கப்பட்டுள்ளது. காசி ஒரு புனித நகரம், அறிவு நகரம். இந்திய நாகரிகத்தின் இந்த இரண்டு பகுதிகளுக்கும் (காசி மற்றும் தமிழ்நாடு) இடையே நூற்றாண்டு பழமையான பிணைப்பு உள்ளது. தமிழ்நாட்டில் உள்ள எந்த கோவிலுக்கும் நீங்கள் சென்றால், பல காசி விஸ்வநாதர் ‘விக்ரஹங்களை’ நீங்கள் காணலாம்.

பல நூற்றாண்டுகளுக்கு முன்பே இரு பக்கங்களிலிருந்தும் யாத்திரை தொடங்கியது. நாட்டின் இந்தப் பகுதியில் ராமேஸ்வரத்திற்கு ஒரு சிறப்பு இடம் உள்ளது. அதேபோல், தெற்கில், குறிப்பாக தமிழ்நாட்டில், காசி விஸ்வநாதருக்கு ஒரு சிறப்பு இடம் உண்டு. இதுவே நமது நாகரிகத்தின் தனித்துவம், நமது பன்முகத்தன்மை. பன்முகத்தன்மை நமது பலம். பிரதமர் மோடியின் தொலைநோக்குத் தலைமையின் காரணமாக காசிக்கும் தமிழ்நாட்டிற்கும் இடையே ஒரு அறிவுப் பாலத்தை நாங்கள் உருவாக்கியுள்ளோம்’ என்றார்.

* தமிழ் சரியான கவுரவத்தை பெறுகிறது: சி.பி.ராதாகிருஷ்ணன்

காசி தமிழ் சங்கமதொடக்கவிழா செய்தி தொடர்பாக துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் வெளியிட்ட வீடியோவில்,’ இந்த ஆண்டுக்கான கருப்பொருளான ‘தமிழ் கற்றுக்கொள்வோம்’ என்பதை வரவேற்கிறேன். இது மொழியியல் மற்றும் கலாச்சார நல்லிணக்கத்தை வலுப்படுத்துகிறது. சென்னையில் உள்ள மத்திய செம்மொழி தமிழ் நிறுவனத்தால் பயிற்சி பெற்ற 50 இந்தி பேசும் தமிழ் ஆசிரியர்கள் மற்றும் ஒருங்கிணைப்பாளர்கள் 15 நாள் காலகட்டத்தில் 50 அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் 1,500 க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு அடிப்படைத் தமிழைக் கற்பிக்க வாரணாசிக்கு வந்துள்ளனர்.

அதே போல் உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த 300 மாணவர்கள் பத்து குழுக்களாக தமிழ்நாட்டின் முன்னணி நிறுவனங்களுக்குச் சென்று, இருவழி கலாச்சார புரிதல் மற்றும் பரிமாற்றத்தை வலுப்படுத்தும் முயற்சியையும் நான் வரவேற்கிறேன். காசியும் தமிழகமும் இந்தியாவின் பண்டைய நாகரிகத்தின் ஒளிரும் விளக்குகளாக நிற்கின்றன, அவற்றின் கலாச்சார செழுமையால் தேசத்தை ஒளிரச் செய்கின்றன’ என்றார்.

Related Stories: