சென்னை: டிட்வா புயல் காரணமாக சென்னையில் படிப்படியாக மழை அதிகரிக்கும் என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். டிட்வா புயல் குறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கூறியதாவது: காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, சென்னை ஆகிய மாவட்டங்களில் இன்று அதிகனமழை பெய்யும். இந்த புயல் சென்னைக்கு வரும் போது வலுவிழப்பதால் காற்றானது மணிக்கு 50 அல்லது 60 கி.மீ. வேகத்தில் இருக்கும்.
கஜா புயலின்போது மணிக்கு 140 கி.மீ. வேகத்திலும் தானே புயலின் போது 150 கி.மீ. வேகத்திலும் வர்தா புயலின் போது 120 கி.மீ. வேகத்திலும் காற்று வீசியது. அதுமட்டுமல்லாமல், மழை மெதுவாக கடலூர் மற்றும் பாண்டிச்சேரி பகுதிகளுக்கு நகரும். இதனால், காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை மற்றும் செங்கல்பட்டு பகுதிகளில் அதிகனமழைக்கு வாய்ப்புள்ளது. தெற்குப் பகுதிகளில் மிதமானது முதல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
இன்று திருவாரூர், தஞ்சாவூர், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கடலூர் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. ‘டிட்வா’ புயல் தமிழக கடற்கரையை ஒட்டியே நகர்ந்து வருகிறது. இன்று (ஞாயிறு) வரை கடற்கரைக்கு இணையாக பயணித்து, இன்று மாலை தீவிர புயலாகச் சென்னையை நெருங்கும். புயல் வலுவிழக்கும் என்று முன்னர் கருதப்பட்ட நிலையில், இன்று சென்னைக்கு அருகில் இந்த புயல் வலுவடைந்தே வருகிறது. புயல் கடல் பரப்பில் இருக்கும் வரை டெல்டாவில் கனமழை தொடரும்.
மேலும் சென்னையிலிருந்து 380 கிலோ மீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ள டிட்வா புயல் காரணமாக, சென்னை மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களில் படிப்படியாக மழை அதிகரிக்கும். இந்நிலையில் டிட்வா புயல், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக சென்னையை இன்று மாலை நெருங்கும். எனவே, அடுத்த 24 மணி நேரத்தில் நாகை, மயிலாடுதுறை, கடலூர் மற்றும் பாண்டிச்சேரி ஆகிய பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
